வடமாகாண சுகாதாரத் திணைக்களத்துக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியத் தேவைகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை, சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஏற்றுக்கொண்டுள்ளார். ஏனைய மாகாணங்களைப் போலன்றி, வடக…

வடமாகாண சுகாதாரத் திணைக்களத்துக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியத் தேவைகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை, சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஏற்றுக்கொண்டுள்ளார். ஏனைய மாகாணங்களைப் போலன்றி, வடக்கில் மாவட்டப் பொது மருத்துவமனைகள் மாகாண சபையின் கீழ் இயங்குவதைக் கருத்தில் கொண்டு, நிதி ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி விசேட மேலதிக நிதி ஒதுக்கீடுகள் பெற்றுத் தரப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.

வடக்கு மாகாண சுகாதாரத்துறை மேம்பாடு தொடர்பான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல், ஆளுநர் செயலகத்தில் நேற்று (27.06.2026) மாலை நடைபெற்றது.அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோர் கூட்டாகத் தலைமை தாங்கிய இக்கூட்டத்தில், மத்திய சுகாதார அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.வடக்கு ஆளுநர் கூறும் விடயம்“வடக்கு மாகாண சபை மொத்தம் 117 மருத்துவமனைகளை நிர்வகிக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளது. ஏனைய மாகாணங்களில் மத்திய அமைச்சால் நிர்வகிக்கப்படும் மாவட்டப் பொது மருத்துவமனைகளை, வடக்கில் மாகாண சபையே நிர்வகிப்பதால் நிதிச் சுமை ஏற்படுகிறது. எனவே, மத்திய அமைச்சு ஏனைய மாவட்டப் பொது மருத்துவமனைகளுக்குச் செலவிடும் அதே அளவிலான நிதியை வடக்கு மாகாண சபைக்கும் வழங்க வேண்டும். அத்துடன், பராமரிப்பு மற்றும் மூலதன ஒதுக்கீடுகள் போதாமையைக் கருத்தில் கொண்டு, மத்திய அமைச்சின் ஊடாகப் பல வருட மூலதன முதலீட்டுத் திட்டமொன்றை உருவாக்க வேண்டும்.

கிளிநொச்சி விசேட பெண்கள் மருத்துவமனைக்கெனப் புதிதாக அனுமதிக்கப்பட்ட 58 ஆளணிகளில், மத்திய அமைச்சின் கீழுள்ள 45 வெற்றிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். வடக்கு - கிழக்கு மாகாணப் பிரிப்பின் பின்னர் வடக்கில் 1,500 க்கும் மேற்பட்ட பணியிடங்கள் இழக்கப்பட்டுள்ளன. 55 பிரதேச மருத்துவமனைகளில் 34 மருத்துவமனைகள் தாதியர் இன்றி இயங்குகின்றன. 11 ஆண்டுகளாக முடக்கப்பட்டிருக்கும் அடிப்படை நிலை ஊழியர்களுக்கான வெற்றிடங்கள் மற்றும் மருந்தாளுநர்களாக மாற்றப்பட வேண்டியஃநிரப்பப்பட வேண்டிய பகிர்ந்தளிப்பாளர் வெற்றிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும். மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டப் பொது மருத்துவமனைகளில் நிலவும் விசேட மருத்துவ நிபுணர் வெற்றிடங்களுக்குத் தற்காலிக இணைப்புகளுக்குப் பதிலாக நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட வேண்டும். தாதியர்கள் கட்டாய சேவையின் பின்னர் வடக்கிலிருந்து வெளியேறுவதைத் தடுக்க, அவர்களுக்கான குறைந்தபட்ச சேவைக் காலத்தை நீட்டிக்க வேண்டும்.உடனடி நிதி தேவை வவுனியா மருத்துவமனையின் பழுதடைந்த சி.ரி.ஸ்கேனரை மாற்றுவதுடன், மன்னார் மருத்துவமனைக்குப் புதிய சி.ரி. ஸ்கேனர் வழங்கப்பட வேண்டும். தெல்லிப்பழை கதிரியக்கத் தொகுதி மற்றும் செட்டிகுளம் சிறுநீரக நோய் மத்திய நிலையம் போன்ற இடைநிறுத்தப்பட்ட செயற்றிட்டங்களை நிறைவு செய்ய உடனடி நிதி தேவை. அத்துடன், பழுதடைந்துள்ள நோயாளர் காவு வண்டிகள் மாற்றப்பட வேண்டும்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையை 'தேசிய மருத்துவமனையாக' மாற்றுவதை உறுதியான இலக்காகக் கொண்டு அதன் உட்கட்டமைப்பு மற்றும் ஆளணியை மேம்படுத்த வேண்டும். தெல்லிப்பழையை மாவட்டப் பொது மருத்துவமனையாகத் தரமுயர்த்த வேண்டும். மேலும் சங்கானை, சிலாவத்துறை, கோப்பாய் மற்றும் சாவகச்சேரி மருத்துவமனைகளின் தரமுயர்த்தல் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும்.

வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சு மற்றும் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் இணைந்து சிறப்பான முறையில் நாய்களுக்கான கருத்தடை சிகிச்சையை மேற்கொண்டு வருகின்றன. மத்திய சுகாதார அமைச்சு இதற்கென ஒதுக்கும் நிதியை மாகாண சபைக்கு வழங்கினால், வேலைத்திட்டத்தை மேலும் வினைத்திறனாக முன்னெடுக்க முடியும்” என்றார் ஆளுநர். ஆளுநரின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த சுகாதார அமைச்சர், ஒவ்வொரு விடயத்துக்கும் சாதகமான பதில்களை வழங்கினார். இந்த உயர்மட்டக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீபவானந்தராசா, வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் (நிதி), மாகாண சுகாதாரப் பணிப்பாளர், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.