பூ.லின்ரன் வடமராட்சி கிழக்கு, வத்திராயன் கிராமத்தில், 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையால் (சுனாமி) பாதிக்கப்பட்டு வீடும் காணியுமின்றித் தவித்த வறுமைக்கோட்டிற்குட்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கத்தால் காணி வழங்கிவைக்கப்பட்டிருந்தது. அவ்வாறு வழங்கப்பட்ட காணியில் கடந்த 21 வருடங்களாக வசித்த…
பூ.லின்ரன்
வடமராட்சி கிழக்கு, வத்திராயன் கிராமத்தில், 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையால் (சுனாமி) பாதிக்கப்பட்டு வீடும் காணியுமின்றித் தவித்த வறுமைக்கோட்டிற்குட்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கத்தால் காணி வழங்கிவைக்கப்பட்டிருந்தது. அவ்வாறு வழங்கப்பட்ட காணியில் கடந்த 21 வருடங்களாக வசித்து, அதனைப் பராமரித்து வந்த சிவதாஸ் ஞானவேல் என்பவரது இல்லமும், அதனைச் சுற்றியிருந்த காணி வேலிகளும் வியாழக்கிழமை (06) அதிகாலை சந்தேகத்திற்குரிய நபர்கள் சிலரால் மிகக் கொடூரமான முறையில் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வாழ்வாதாரத்தையே கேள்விக் குறியாக்கும் வகையில் இடம்பெற்றுள்ள இந்த அடாவடிச் செயல், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நீண்டகாலமாக அமைதியான முறையில் வாழ்ந்து வந்த ஏழைக் குடும்பத்தின் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதல் சம்பவம் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
முன்னைய காணித் தகராறும் பொலிஸ் விசாரணையும்:
குறிப்பிட்ட இந்தக் காணி தொடர்பாக, “இது எங்களது காணி” என உரிமை கோரும் தரப்பினருக்கும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும் இடையே ஏற்கனவே முரண்பாடுகள் நிலவி வந்துள்ளன. இது தொடர்பாக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு, பொலிசாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. விசாரணைகளின் முடிவில், முறையான தீர்வினைப் பெற்றுக்கொள்வதற்காக இப்பிரச்சினை மருதங்கேணி பிரதேச செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே, இந்த அராஜக நடவடிக்கை அரங்கேறியுள்ளது.
நீதிமன்றம் மற்றும் நிர்வாக வழிமுறைகளின் கீழ் தீர்வு எதிர்பார்க்கப்பட்ட சூழலில், சட்டத்தைத் கையில் எடுத்துக்கொண்டு நடத்தப்பட்டுள்ள இந்த வன்முறைச் செயல் மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உடனடியாக உரிய நீதி வழங்கப்பட வேண்டும் என்றும், இந்த வன்முறையில் ஈடுபட்ட குண்டர்களை மருதங்கேணி பொலிசார் உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












