வவுனியாவில் வீட்டை உடைத்து, 51 வயது பெண்ணை கூட்டு பாலியல் துர்நடத்தைக்குட்படுத்தி, கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் இன்று (14) தெரிவித்துள்ளனர். கடந்த 8ஆம் திகதி வவுனியா, மடுகந்தை, மயிலங்குளம் பகுதியில் உள்…

வவுனியாவில் வீட்டை உடைத்து, 51 வயது பெண்ணை கூட்டு பாலியல் துர்நடத்தைக்குட்படுத்தி, கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனை வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் இன்று (14) தெரிவித்துள்ளனர்.

கடந்த 8ஆம் திகதி வவுனியா, மடுகந்தை, மயிலங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், அங்கிருந்த வாகன சாரதி மீது வாளால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.பெறுமதியான பொருட்கள்

பின்னர், வீட்டின் உரிமையாளரான 51 வயது பெண்ணின் வாயை பிளாஸ்டரால் ஒட்டி, கைகளை பின்புறமாகக் கட்டி, அவர் அணிந்திருந்த நகைகளை கழற்றி எடுத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, மூவர் இணைந்து குறித்த பெண்ணை கூட்டு பாலியல் துர்நடத்தைக்குட்படுத்தியுள்ளனர். வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெறுமதியான பொருட்களையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இதன்போது, 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரத்தினக்கற்கள், 56 இலட்சம் ரூபாய் பெறுமதியான 15 பவுணுக்கும் அதிகமான தங்க நகைகள், 5 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணம், 15 வாகனப் புத்தகங்கள் மற்றும் திறப்புகள், 35 காணி மற்றும் வீட்டு உறுதிப்பத்திரங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதையடுத்து விரைந்து செயற்பட்ட பொலிஸார், ஆபத்தான நிலையில் இருந்த இருவரையும் மீட்டு வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர்.

வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனையின் பேரில், வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.யே.எஸ். ரத்னமலலாவின் வழிகாட்டலில், வவுனியா குற்றத்தடுப்பு பிரிவின் பதில் பொறுப்பதிகாரி ஆர். பந்துல தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

விசாரணைகளின் போது, பாதிக்கப்பட்ட பெண்ணின் தொழிற்சாலையில் பணியாற்றிய 35 வயதுடைய உக்குவெல, மாத்தறை பகுதியைச் சேர்ந்த ஒருவரும், 29 வயதுடைய களேமிதுனுவெல, சிவலாங்குளம் பகுதியைச் சேர்ந்த மற்றொருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.பாதிக்கப்பட்ட பெண் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், அவரது சொத்துக்கள் தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, அவரது முதல் கணவரின் மகனே இந்த கொள்ளைச் சம்பவத்திற்கு திட்டமிட்டு மூல காரணமாக செயற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் தனது காரில் களேமிதுனுவெல, சிவலாங்குளம் பகுதியில் இருந்து சந்தேகநபர்களை அழைத்து வந்து, வீட்டிற்கு அருகிலுள்ள வீதியில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலும், சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த திருடப்பட்ட இரத்தினக்கற்கள், தங்க நகைகள், வாகனப் புத்தகங்கள், திறப்புகள் மற்றும் 35 காணி மற்றும் வீட்டு உறுதிப்பத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.