வெனிசுவெலாவின் வடக்குக் கடலோரப் பகுதியில் புதன்கிழமை (24) ஏற்பட்ட சக்திவாய்ந்த இரு பூகம்ப அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 920ஆக அதிகரித்துள்ளதாகவும் மேலும் 3,360க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இடிபாடுகளுக்குள்…
வெனிசுவெலாவின் வடக்குக் கடலோரப் பகுதியில் புதன்கிழமை (24) ஏற்பட்ட சக்திவாய்ந்த இரு பூகம்ப அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 920ஆக அதிகரித்துள்ளதாகவும் மேலும் 3,360க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இடிபாடுகளுக்குள் இன்னும் 172க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என கருதப்படுவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த பூகம்பத்தில் அந்நாட்டின் மிக முக்கிய துறைமுகம் மற்றும் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ள 'லா குவைரா' (La Guaira) மாகாணம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் கராகஸில் உள்ள ஆல்டமிரா மற்றும் லாஸ் பாலோஸ் கிராண்டேஸ் ஆகிய பகுதிகள் பெருமளவு சேதங்களை சந்தித்துள்ளன. மருத்துவமனைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. இந்நிலையில், இடிபாடுகளுக்குள் இருந்து 3 சிறுவர்கள் உயிருடன் மீட்கப்பட்டமை, மக்களுக்குச் சற்று நம்பிக்கையை அளித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. அத்துடன் பிரிட்டன், அமெரிக்கா, மெக்சிகோ, நெதர்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் தங்களின் சிறப்பு மீட்புக் குழுக்கள், மோப்ப நாய்கள் மற்றும் ட்ரோன்களை வெனிசுவெலாவுக்கு அனுப்பியுள்ளன. அமெரிக்கா 150 மில்லியன் டொலர் நிதி உதவியையும், போர்க்கப்பல்களையும் மீட்புப் பணிக்காக வழங்குவதாக அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை (UN) இந்த மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

