கிளிநொச்சி, பளையில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட தகவல் முற்றிலும் போலியானது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (20) கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து மேலும் தெர…
கிளிநொச்சி, பளையில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட தகவல் முற்றிலும் போலியானது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (20) கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
இந்த போலிச் செய்தியாளர் சந்திப்பை பொரலஸ்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த சங்கீத் ஜெயசேகர என்பவர் நடத்தியதாக விசாரணைகளில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
விசாரணைகளின்படி, சந்தேகநபரிடம் இரண்டு போலி அடையாள அட்டைகள் காணப்பட்டதுடன், அவர் ஏழு வெவ்வேறு முகவரிகளைப் பயன்படுத்தியிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், நிதி மோசடி உள்ளிட்ட மூன்று குற்றவியல் வழக்குகளில் அவர் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
தம்மை மருத்துவராக அடையாளப்படுத்திக் கொண்டு அவர் பல்வேறு நபர்களை ஏமாற்றி வந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அமைச்சர் கூறினார்.
அத்துடன், சந்தேகநபர் முன்னர் சில அமைச்சுக்களின் அதிகாரிகளுக்கு ஆலோசகராகப் பணியாற்றியுள்ளதாகவும், அந்த நியமனங்கள் தொடர்பிலும் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
குறித்த செய்தியாளர் சந்திப்பைத் தொடர்ந்து கிளிநொச்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், அங்கு விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் இருந்ததற்கான எந்தவொரு ஆதாரமும் கிடைக்கவில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
குறித்த இடம் பயிர்ச்செய்கைக்காகப் பயன்படுத்தப்பட்ட நிலப்பகுதி மாத்திரமே எனவும் அவர் தெரிவித்தார்.
இனங்களுக்கு இடையே பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கில் சந்தேகநபர் திட்டமிட்டு பொதுமக்களைத் தவறாக வழிநடத்தியுள்ளதாகவும் அமைச்சர் குற்றம் சாட்டினார்.
குறித்த பகுதியில் எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கையும் பதிவாகவில்லை எனத் தெரிவித்த அவர், இனவாதத்தைத் தூண்டும் அல்லது பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கும் வகையிலான எந்தவொரு நடவடிக்கைக்கும் இடமளிக்கப்பட மாட்டாது எனவும் உறுதியளித்தார்.
இதனிடையே, குறித்த பகுதி கிளிநொச்சி மாவட்டத்தின் கண்ணகிபுரம், முட்கொம்பன் பகுதியில் அமைந்துள்ள அரச காணி என அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ முன்னதாகத் தெரிவித்திருந்தார். இந்த நிலம் 1919ஆம் ஆண்டு வனப்பகுதியாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட அரச காணி எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
தியாகராசா குலதீபன் என்பவரால் குறித்த காணியில் கற்றாழை மற்றும் காய்கறிப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும், அங்கு ஆடைகள் தயாரிக்கும் நோக்கில் மூன்று மாடிக் கட்டடமொன்றும் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் கடந்த பெப்ரவரி மாதம் குறித்த காணியிலிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டிருந்த போதிலும், அந்த உத்தரவை மீறி சட்டவிரோத மணல் அகழ்வு உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த விவகாரம் அரச காணியை சட்டவிரோதமாக ஆக்கிரமித்தல், அனுமதியற்ற கட்டுமானம் மற்றும் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பானதே அன்றி, விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் தொடர்பானது அல்ல எனப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். R












