வடமேல் வனஜீவராசிகள் வலயத்திற்குட்பட்ட கல்கமுவ - காசுகோட்டு பிரதான வீதியில் நடமாடும் காட்டு யானைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ட்ரோன் (Drone) கமமராவை இயக்கிய நபர் ஒருவர் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். காட்டு யானைகள் அடிக்கடி வீதியைக் கடக்கும் கா…

வடமேல் வனஜீவராசிகள் வலயத்திற்குட்பட்ட கல்கமுவ - காசுகோட்டு பிரதான வீதியில் நடமாடும் காட்டு யானைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ட்ரோன் (Drone) கமமராவை இயக்கிய நபர் ஒருவர் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காட்டு யானைகள் அடிக்கடி வீதியைக் கடக்கும் காசுகோட்டு யானைக் குகை (Elephant Tunnel) பகுதிக்கு அருகில் வைத்து ட்ரோனை இயக்கிய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநநபரும், அவரிடமிருந்த ட்ரோன் கமமராவும் மஹவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர் தனது தவறை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து வழக்கு விசாரணைகள் வேறொரு நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, காசுகோட்டு யானைக் குகைக்கு அருகில் யானைகள் வீதியைக் கடப்பதைப் பார்ப்பதற்காகப் பொதுமக்கள் பெருமளவில் திரள்வது வழக்கம் எனவும், இதனால் அச்சமடையும் யானைகள் பொதுமக்களைத் துரத்தக்கூடும் என்பதால் இது பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் எனவும் வனஜீவராசிகள் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மேலும், அனுமதி இல்லாமல் ட்ரோன் கருவிகளைப் பயன்படுத்தி வனவிலங்குகளைச் சட்டவிரோதமாகப் படம்பிடிக்கும் நபர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சந்தேகநபர்களும் அவர்களது உபகரணங்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் எனவும் அதிகாரிகள் மேலும் எச்சரித்துள்ளனர்.