யாழ் மாநகர சபையின் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடுகளுக்கு மாநகர ஆணையாளர் உள்ளிட்ட நிர்வாக அதிகாரிகள் தொடர்ச்சியாக இடையூறு ஏற்படுத்தி வருவதாகக் குற்றம் சுமத்தி, மாநகர முதல்வர், பிரதி முதல்வர் உள்ளிட்ட அனைத்து கட்சிகளையும் சேர்ந்த மாநகர சபை உறுப்பினர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில்…

யாழ் மாநகர சபையின் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடுகளுக்கு மாநகர ஆணையாளர் உள்ளிட்ட நிர்வாக அதிகாரிகள் தொடர்ச்சியாக இடையூறு ஏற்படுத்தி வருவதாகக் குற்றம் சுமத்தி, மாநகர முதல்வர், பிரதி முதல்வர் உள்ளிட்ட அனைத்து கட்சிகளையும் சேர்ந்த மாநகர சபை உறுப்பினர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ் மாநகர சபையின் மாதாந்த அமர்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிலையில், தேநீர் இடைவேளையின் போது மாநகர ஆணையாளர் அலுவலகத்திற்கு முன்பாக ஒன்று கூடிய மக்கள் பிரதிநிதிகள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ் மாநகர சபையில் அங்கம் வகிக்கும் பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் கட்சி பேதமின்றி போராட்டத்தில் பங்கேற்றனர்.

மாநகர சபை நிர்வாக அதிகாரிகளின் செயற்பாடுகளால், மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் தமது மக்கள் பணிகளை உரிய முறையில் முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

குறிப்பாக, மாநகர சபையின் ஊடாக மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய அத்தியாவசிய சேவைகள் மற்றும் அபிவிருத்திப் பணிகளில் அதிகாரிகள் வேண்டுமென்றே தாமதத்தை ஏற்படுத்துவதாகவும், மக்கள் பிரதிநிதிகளின் அதிகார வரம்பிற்குள் தலையிட்டு செயற்பாடுகளை முடக்க முயற்சிப்பதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தினர்.

இதற்கு முன்னதாக, மாநகர சபையின் மாதாந்த அமர்விலும் அதிகாரிகளால் ஏற்படுத்தப்படுவதாகக் கூறப்படும் இடையூறுகள் தொடர்பில் உறுப்பினர்கள் விரிவாக விவாதித்திருந்தனர்.

இந்நிலையில், குற்றச்சாட்டுகள் தொடர்பில் மாநகர ஆணையாளர் அரவிந்தராஜிடம் ஊடகங்கள் கருத்து கேட்க முற்பட்டபோது, ஊடகங்களை சந்தித்து கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என அவர் தெரிவித்தார்.