யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் கலைப்பீடாதிபதி சிவசுப்பிரமணியம் ரகுராம், யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர், முன்னாள் மாணவிகள் மற்றும் சமூக ஊடகத் தளங்கள் உள்ளிட்ட 14 பேரை எதிர்மனுதாரர்களாகக் குறிப்பிட்டு நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் மன…
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் கலைப்பீடாதிபதி சிவசுப்பிரமணியம் ரகுராம், யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர், முன்னாள் மாணவிகள் மற்றும் சமூக ஊடகத் தளங்கள் உள்ளிட்ட 14 பேரை எதிர்மனுதாரர்களாகக் குறிப்பிட்டு நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளார்.குறித்த மனு புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், அதனை எதிர்வரும் ஜூலை 10ஆம் திகதி வரை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் கலைப்பீடாதிபதியான சிவசுப்பிரமணியம் ரகுராம், தன்னை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக முன்னாள் பல்கலைக்கழக மாணவியும், இரண்டு ஆண்டுகள் தற்காலிக துணை விரிவுரையாளராகப் பணியாற்றியவருமான பெண் ஒருவர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தார்.அதனைத் தொடர்ந்து, பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணைக் குழு நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தச் சூழலில், முன்னாள் கலைப்பீடாதிபதிக்கும் குறித்த முன்னாள் மாணவிக்கும் இடையிலானதாகக் கூறப்படும் சில தொலைபேசி ஒலிப்பதிவுகள் டிக்டொக் மற்றும் முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. இதனைத் தொடர்ந்து, பல்வேறு சமூக ஊடகத் தளங்களில் இது தொடர்பான கருத்துகளும் வெளியிடப்பட்டன.
இதையடுத்து, நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் 20ஆம் பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், குற்றச்சாட்டை முன்வைத்த முன்னாள் மாணவி, அவரது நண்பரான முன்னாள் மாணவி, யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் முகநூல், டிக்டொக், யூடியூப் ஆகிய சமூக ஊடகத் தளங்களும் எதிர்மனுதாரர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
இந்த மனு தொடர்பாக நிபந்தனையுடனான கட்டளையை பிறப்பிக்க வேண்டுமா என்பது குறித்து தீர்மானிப்பதற்காக வழக்கை ஜூலை 10ஆம் திகதிக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
குறிப்பாக, இந்த வழக்கில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்துவரும் நிலையில், அவை தொடர்பில் இதுவரை நீதிமன்றத்தால் எந்தவித இறுதித் தீர்ப்பும் வழங்கப்படவில்லை.

