பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் சகலரும் பங்கேற்குமாறு பருத்தித்துறை நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார…
பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் சகலரும் பங்கேற்குமாறு பருத்தித்துறை நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார். இன்று (28) ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், பருத்தித்துறை நகரத்தின் அபிவிருத்திக்கு தடையாகவும், எமது நகரத்தின் புராதன சின்னங்கள் / இடங்களை ஆக்கிரமித்தும் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற கோரி எமது சபையினால் இரண்டாவது கவனயீர்ப்பு போராட்டம் வரும் செப்டெம்பர் 11 ஆம் திகதி பருத்தித்துறையில் பாரிய போராட்டப் பேரணி நடாத்தப்பட உள்ளது.கண்டனப் பேரணி
பருத்தித்துறை துறைமுக சந்தியில் இருந்து அன்றைய தினம் காலை 8.30 மணிக்கு கண்டனப் பேரணி ஆரம்பித்து பருத்தித்துறை பிரதேச செயலகம் வரை இடம்பெறும் இப்போராட்டத்தில் அரசியல், கட்சி வேறுபாடுகள் கடந்து சகல அரசியல் தரப்பினரும், வர்த்தகர்கள், மரக்கறி, மீன் வியாபாரிகள், கடற்றொழில் சங்கத்தினர் உள்ளிட்ட பொது அமைப்புகள், சமூகமட்ட அமைப்புகளும் பங்கேற்று ஆதரவு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் எனக் குறிப்பிட்டார்.இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தும் இந்தப் போராட்டத்திற்கு பருத்தித்துறை நகரசபையில் அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் சக்தி சார்பில் தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் தவிர்த்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழரசு கட்சி, ஜனநாயக தேசிய கூட்டணி, ஈழ மக்கள் ஜனநாய கட்சி மற்றும் சுயேட்சை(ஊசி) குழு ஆகியன முழுமையான ஆதரவினை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.












