யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் 45-வது நாளான வியாழக்கிழமை (06), புதிதாக 8 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும், ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த 5 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட…

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் 45-வது நாளான வியாழக்கிழமை (06), புதிதாக 8 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும், ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த 5 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் உத்தரவின்படி 56 நாட்கள் தொடர்ச்சியாக அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.இன்றைய அகழ்வுப் பணிகளின் போது, மனித எச்சங்களுடன் சிறுவர்களின் ஆடைகளில் பயன்படுத்தப்படும் பொத்தான்கள் மற்றும் பழமையான நாணயக் குற்றி ஒன்று சான்றுப் பொருட்களாக மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களைச் சேர்த்து இதுவரை மொத்தம் 99 நாட்கள் அகழ்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

அகழ்வாராய்ச்சியின் தற்போதைய நிலவரப்படி, மொத்தம் 499 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 494 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டு மேலதிக நீதிமருத்துவ மற்றும் தடயவியல் பரிசோதனைகளுக்காக பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான இந்த அகழ்வாராய்ச்சி, கடந்தகால மனித உரிமை மீறல்கள் மற்றும் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான உண்மைகளை வெளிக்கொணரும் முக்கியமான விசாரணையாகக் கருதப்படுவதால், அதன் முன்னேற்றம் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.