இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லைதாண்டிய அத்துமீறல் கடற்றொழில் நடவடிக்கைகளைக் கண்டித்து யாழ்ப்பாணம் தீவகப் பகுதி கடற்றொழிலாளர்கள் இன்று(29.06.2026) கடலில் இறங்கி கறுப்புக்கொடி ஏந்திய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிகட்டுவான் இறங்குதுறை பகுதியில் கடலுக்குள் இறங்கிச் சென்ற தீவக கட…
இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லைதாண்டிய அத்துமீறல் கடற்றொழில் நடவடிக்கைகளைக் கண்டித்து யாழ்ப்பாணம் தீவகப் பகுதி கடற்றொழிலாளர்கள் இன்று(29.06.2026) கடலில் இறங்கி கறுப்புக்கொடி ஏந்திய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறிகட்டுவான் இறங்குதுறை பகுதியில் கடலுக்குள் இறங்கிச் சென்ற தீவக கடற்றொழிலாளர்கள், கறுப்புக்கொடிகளை ஏந்தி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதுடன், ஜனாதிபதிக்கு அவசர நடவடிக்கை கோரி கோரிக்கை மனு ஒன்றையும் விடுத்துள்ளனர்.கறுப்புக்கொடியுடன் போராட்டம் இந்திய இழுவைப் படகுகளின் சட்டவிரோத அத்துமீறலால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான கடற்றொழில் உபகரணங்களும் அழிக்கப்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
குறித்த போராட்டகாரர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கோரிக்கை மனுவில், நெடுந்தீவு, நயினாதீவு, வேலணை, எழுவைத்தீவு, அனலைதீவு, யாழ்குடா, பாக்குநீரிணை மற்றும் மன்னார் கரையோரப் பகுதிகளைச் சேர்ந்த பாரம்பரிய மீனவ சமூகங்களாகிய தாங்கள், தங்களது வாழ்வாதாரம், கடல்வளம் மற்றும் நாட்டின் கடல்சார் மரபைப் பாதுகாப்பதற்காக அரசின் உடனடி தலையீடு வேண்டும்.
மேலும் பல தசாப்தங்களாக இந்திய இழுவைப் படகுகள் இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து அடிமடி இழுவை கடற்றொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், இது வெறும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கை மட்டுமன்றி கடலடித் தளங்கள், பவளப் பாறைகள் மற்றும் மீன்களின் இனப்பெருக்கப் பகுதிகளை அழித்து கடல் உயிரினப் பல்வகைமையையும் மீன்வளத்தையும் கடுமையாக பாதிக்கிறது.உறுதியான தீர்வு மேலும், இந்த நடவடிக்கைகள் வடக்கின் கடல்சார் பொருளாதாரம், உணவுப் பாதுகாப்பு மற்றும் இலங்கையின் கடல்வள உரிமைகளுக்கு நேரடியான அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
காரைக்கால், நாகப்பட்டினம் மற்றும் தொண்டி பகுதிகளைச் சேர்ந்த இந்திய இழுவை மடி விசைப்படகுகள், கடந்த ஜூலை 16 முதல் 18 ஆம் திகதி வரை மூன்று நாட்களில் தீவகத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பாரம்பரிய கடற்றொழிலாளர்களின் ஐந்து கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான நண்டு வலைகளை இழுத்தழித்து சேதப்படுத்தியுள்ளது.
இந்தப் பிரச்சினைக்கு தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த அரசுகள் உறுதியான தீர்வை வழங்கத் தவறியுள்ளதால், வடக்கு கடற்றொழிலாளர்களிடையே ஏமாற்றமும் நம்பிக்கையின்மையும் அதிகரித்துள்ளதுடன், இலங்கை–இந்திய இராஜதந்திர உறவுகளின் பெயரில் வடக்கு மக்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பலியிடப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என வலியுறுத்தியுள்ளனர்.












