யாழ்ப்பாணம் – நவாலி அந்திரான் கிராமத்தில் நேற்று (20) இரவு நடைபெற்ற திருவிழாவின் போது இடம்பெற்ற வாணவேடிக்கையால் தீ விபத்து ஏற்பட்டு, பனை மரம் மற்றும் பாதுகாப்பு வேலி தீப்பற்றி எரிந்ததுடன், சில பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவிழா நிகழ்வுகளின் ஒரு பகுதியாக வாணவேடிக்கைகள் இ…
யாழ்ப்பாணம் – நவாலி அந்திரான் கிராமத்தில் நேற்று (20) இரவு நடைபெற்ற திருவிழாவின் போது இடம்பெற்ற வாணவேடிக்கையால் தீ விபத்து ஏற்பட்டு, பனை மரம் மற்றும் பாதுகாப்பு வேலி தீப்பற்றி எரிந்ததுடன், சில பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருவிழா நிகழ்வுகளின் ஒரு பகுதியாக வாணவேடிக்கைகள் இடம்பெற்றிருந்த நிலையில், அதனால் ஏற்பட்ட தீ காரணமாக குறித்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது அங்கிருந்த பனை மரம் ஒன்றும் பாதுகாப்பு வேலியும் தீப்பற்றி எரிந்துள்ளதுடன், அங்கு திரண்டிருந்த சில பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர், இவ்வாறான அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்காக வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகங்களுக்கு பலமுறை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, தேவையற்ற ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு மற்றும் வாணவேடிக்கைகளை வெடித்தல், லேசர் ஒளிக்கீற்றுகளைப் பயன்படுத்துதல், யானைகளை அழைத்துச் செல்லுதல் உள்ளிட்ட பொதுமக்களின் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு தொடர்ச்சியாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஊடகங்கள் வாயிலாகவும் பொதுமக்களுக்கும், வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகங்களுக்கும் தொடர்ச்சியாக கோரிக்கைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாகவும் அரச அதிபர் தெரிவித்துள்ளார்.
எனினும், சில ஆலய நிர்வாகங்கள் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு உரிய முறையில் செவிசாய்க்காமல், பொதுமக்களுக்கு சிரமத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து வருவது கவலையளிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகத்தினர், மதகுருமார்கள் உள்ளிட்ட பொறுப்புக்கூற வேண்டிய அனைத்து தரப்பினரும் பொதுமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கி, திருவிழா மற்றும் மத நிகழ்வுகளை பொறுப்புடன் நடத்த வேண்டும் என அரச அதிபர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் இவ்வாறான தீ விபத்துகள் மற்றும் ஏனைய அனர்த்தங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு, சமூகப் பொறுப்புணர்வுடன் திருவிழா நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நவாலி அந்திரான் பகுதியில் இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவம், திருவிழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகளின் போது பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளது.












