யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறை பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறுகளை பரப்பியவர்களின் பதிவுகளை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், பேராசிரியர் தொடர்பாக எந்த அவதூறு பதிவுகளையும் செய்ய கூடாது எனவும் இடைக்கால கட்…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறை பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறுகளை பரப்பியவர்களின் பதிவுகளை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், பேராசிரியர் தொடர்பாக எந்த அவதூறு பதிவுகளையும் செய்ய கூடாது எனவும் இடைக்கால கட்டளை வழங்கி பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் குறித்த வழக்கின் எதிர்மனுதாரர் ஒருவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்வதற்கும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். வழக்குத் தாக்கல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறை பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் மீது சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பினர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தனர் என்ற குற்றச்சாட்டில் 14 எதிர் மனுதாரர்களுக்கு நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு இன்று பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் இந்துகா சிவலிங்கம் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது முதலாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம் எதிர் மனுதாரர்கள் சமூக வலைத்தளங்களில் பேராசிரியர் ரகுராம் தொடர்பாக அவதூறான மற்றும் தடை செய்யப்பட்ட கூற்றுக்கள் பதிவு செய்தமையை ஏற்றுக்கொண்ட மன்று இதுவரைக்கும் அவ்வாறு போடப்பட்டிருந்த பதிவுகளை அகற்றுவதோடு, இது சம்பந்தப்பட்ட எந்த விடயத்தையும் எந்த ஒரு சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யக்கூடாது என இடைக்கால கட்டளையிட்டது.
இந்த நிபந்தனைக்குட்பட்ட இடைக்கால கட்டளையை, இறுதி கட்டளையாக ஆக்குவதா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்காக, விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுவதோடு, ஒன்று தொடக்கம் 13 வரையான எதிர்மனுதாரர்களுக்கு இரண்டு கிழமைகளுக்குள் அழைப்பாணையை அனுப்புமாறு மன்று உத்தரவிட்டது.
எதிர்மனுதாரர்கள் அனைவருமே இரண்டு வாரங்களுக்குள் காரணங்காட்டுதல்களுக்காக மன்றில் முன்னிலையாகி, தங்களுடைய சமர்ப்பணங்களை முன்வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
எதிர் மனுதாரர்கள் இதனை செய்யாவிட்டால் இந்த விடயத்தில் குற்றவாளிகளாக அவர்கள் கருதப்பட்டு மன்றினால் தீர்ப்பளிக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
எதிர் மனுதாரர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்த கருத்துக்கள் முகத்தோற்றத்தின் அடிப்படையில அவதூறு மற்றும் தடை செய்யப்பட்ட கூற்றுக்களாக இருப்பதோடு, அது தொடர்பான விசாரணைகளுக்காகவும் காரணங்காட்டுதலுக்காகவும், எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்து நீதவான் உத்தரவிட்டார். இதேவேளை மனுதாரருடைய சட்டத்தரணி முன்வைத்த வாதத்தில் மூன்றாவது எதிர்மனுதாரரான பெண் ஒருவர், சில நாட்களுக்கு முன் தனது சொந்த முகப்புத்தகத் தளத்தில் நீதவான் நீதிமன்றினையும், நீதவானையும் அவதூறு செய்யும் விதத்தில் பதிவிட்டிருந்தமையை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
குறித்த எதிர் மனுதாரரின் பதிவு நீதிமன்ற அவமதிப்பு என்பதுடன் நீதவானின் இறையாண்மையை பாதிப்பதாகவும் கருதிய மன்று, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கை பதிவு செய்ய உத்தரவிட்டார்.
மேலும் மனுதாரரின் சட்டத்தரணி குற்றவியல் சட்டத்தின் கீழ் பிறிதொரு வழக்கை தாக்கல் செய்ய முடியும் எனவும் அறிவுறுத்தினார்.

