கொஸ்லந்தை - மீரியபெத்த தோட்டப் பகுதியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வீதி புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால், அப்பகுதி மக்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருவதாகவும், தற்போதைய அரசாங்கம் இந்த பிரச்சினை தொடர்பில் அலட்சியமாக செயற்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பி…
கொஸ்லந்தை - மீரியபெத்த தோட்டப் பகுதியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வீதி புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால், அப்பகுதி மக்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருவதாகவும், தற்போதைய அரசாங்கம் இந்த பிரச்சினை தொடர்பில் அலட்சியமாக செயற்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சந்திரபுரம், கொஸ்லந்தை எஸ்டேட், மீரியபெத்த, அம்பராகல உள்ளிட்ட பகுதிகளில் வாழும் 6,000க்கும் அதிகமான மக்களின் அன்றாட வாழ்க்கை இந்த வீதியின் மோசமான நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
100 வருடங்களுக்கு மேல் புனரமைக்கப்படாத வீதி 100 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவொரு புனரமைப்பும் இன்றி, குறித்த வீதி குண்டும் குழியுமாக காணப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதுவரை பல அரசாங்கங்கள் மாற்றமடைந்த போதிலும், இந்த பிரச்சினை தொடர்பில் அரசியல் அலுவலகங்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பல கடிதங்கள் அனுப்பப்பட்டதாகவும், பலமுறை கோரிக்கைகள் விடுக்கப்பட்டதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இதுவரை எவரும் உரிய தீர்வோ அல்லது பதிலோ வழங்கவில்லை என்றும், தங்களது வாக்குகளால் உருவாக்கப்பட்ட உள்ளூராட்சி அமைப்புகளால் கூட எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
தேர்தல் காலத்தில் வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் தற்போது தங்களுக்கு எதிராக செயற்படுவதாகவும், இதனால் அப்பகுதி இளைஞர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
மக்களின் கோரிக்கை இதற்கிடையில், கடந்த மே 18ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திர பண்டார குறித்த பகுதிக்கு விஜயம் செய்து, “இரண்டு வாரங்களுக்குள் அனுமதி பெறப்படும்; இந்தத் திட்டத்திற்காக ரூ.500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது” என உறுதியளித்ததாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர். எனினும், இரண்டு மாதங்கள் கடந்தும் எந்தவித நடவடிக்கையோ பதிலோ இல்லாத நிலையில், சில பிரதேச சபை உறுப்பினர்கள் தங்களது சொந்த பகுதிகளுக்கே முன்னுரிமை வழங்கி வீதி புனரமைப்பு பணிகளை மேற்கொள்வதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனால், வீதி புனரமைப்பு பணிகள் உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், பெண்கள், மாணவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் உள்ளிட்ட பலர் தினமும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதால், ஜனாதிபதி நேரடியாக தலையிட்டு தங்களுக்கு உரிய நீதி வழங்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.









-558030_850x460.jpg)
-558031_850x460.jpg)
-558032_850x460.jpg)
-558033_850x460.jpg)