2024ஆம் ஆண்டு அரசியல் ரீதியாக மக்கள் எடுத்த தீர்மானத்தை எதிர்காலத்தில் திருத்திக்கொள்ளத் தயாராகி வருவதாகவும், நாமல் ராஜபக்ஷ சிறையில் அடைக்கப்பட்டாலும் 2029ஆம் ஆண்டு அவரை ஜனாதிபதியாக்குவோம் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்துள…

2024ஆம் ஆண்டு அரசியல் ரீதியாக மக்கள் எடுத்த தீர்மானத்தை எதிர்காலத்தில் திருத்திக்கொள்ளத் தயாராகி வருவதாகவும், நாமல் ராஜபக்ஷ சிறையில் அடைக்கப்பட்டாலும் 2029ஆம் ஆண்டு அவரை ஜனாதிபதியாக்குவோம் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் நேற்று முன்தினம் (16) நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஊழலுக்கு எதிராக செயற்படுவதாகக் கூறும் அரசாங்கம், அரசியல் பழிவாங்கலுக்கு முன்னுரிமை அளித்து ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

அரசியல் நோக்கங்களுக்காக நீதிபதிகளின் பதவிக்காலம் முறையற்ற வகையில் நீட்டிக்கப்படுவதாகவும், அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாகவும் சாந்த பண்டார தெரிவித்தார்.

தமது அரசியல் இருப்பை உறுதிப்படுத்தும் வகையிலான மறுசீரமைப்புகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும், நீதிபதிகளின் பதவிக்கால நீடிப்பும் அதன் ஒரு பகுதியாகவே அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் தரப்பினர் இலக்கு வைக்கப்பட்டு கைது செய்யப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இந்நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீது மக்கள் மத்தியில் மீண்டும் நம்பிக்கை அதிகரித்து வருவதாகவும், கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல்களில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்தவர்களில் பலர் தற்போது தமது அணியுடன் இணைந்து வருவதாகவும் சாந்த பண்டார தெரிவித்தார்.

எதிர்வரும் 2029ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.