அச்சமடையும் அளவுக்கு அரசியலமைப்பின் 22ஆம் திருத்தம் கறுப்புப் பேய் அல்ல. போலியான குற்றச்சாட்டுக்கள், திரிபுபடுத்தப்பட்ட விடயங்கள் மற்றும் சுய நலன்களால் இந்த திருத்தம் தொடர்பில் தவறான நிலைப்பாட்டை ஒரு தரப்பினர் தேசிய, சர்வதேச மட்டத்தில் தோற்றுவித்துள்ளார்கள். ஐ.நா. சபையில் விசேட…
அச்சமடையும் அளவுக்கு அரசியலமைப்பின் 22ஆம் திருத்தம் கறுப்புப் பேய் அல்ல. போலியான குற்றச்சாட்டுக்கள், திரிபுபடுத்தப்பட்ட விடயங்கள் மற்றும் சுய நலன்களால் இந்த திருத்தம் தொடர்பில் தவறான நிலைப்பாட்டை ஒரு தரப்பினர் தேசிய, சர்வதேச மட்டத்தில் தோற்றுவித்துள்ளார்கள். ஐ.நா. சபையில் விசேட பிரதிநிதி வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) அன்று நிலையியல் கட்டளை 27/2 இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,
“2025.12.31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நீதிவான் நீதிமன்றங்களில் 753,093 வழக்குகள், மாவட்ட நீதிமன்றங்களில் 263,472 வழக்குகள், மேல் நீதிமன்றங்களில் 28,134 வழக்குகள், சிவில் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் 6,763 வழக்குகள், வாணிப மேல் நீதிமன்றத்தில் 4,302 வழக்குகள், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் 5,038 வழக்குகள், உயர் நீதிமன்றத்தில் 4,724 வழக்குகள் என்ற அடிப்படையில் நீதிமன்ற கட்டமைப்பில் மொத்தமாக 1,065,256 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
நீதிபதிகளின் பதவிக்காலத்தை அதிகரிக்கும் தீர்மானம் தொடர்பில் மகாநாயக்க தேரர்களுக்கு ஒரு தரப்பினர் தவறான விடயங்களைக் குறிப்பிட்டுள்ளனர். மகாநாயக்க தேரர்களை நேரில் சந்தித்துத் தீர்மானத்தின் காரணத்தைத் தெளிவுபடுத்தினோம். நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் பயனுடையதாக அமைந்தால் அதனை ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்டு மகாநாயக்க தேரர்கள் ஆசீர்வாதமளித்தனர்.
நீதிபதிகளின் பதவிக்காலத்தை அதிகரிக்கும் தீர்மானம் தொடர்பில் ஒரு தரப்பினர் சர்வதேச அமைப்புகளுக்கும் தவறான விடயங்களையே முன்வைத்துள்ளனர். ஐ.நா. சபையில் விசேட பிரதிநிதி வெளியிட்ட அறிக்கைக்குப் பதிலளிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
நீதிபதிகளின் பதவிக்காலத்தை அதிகரிக்கும் தீர்மானம் தொடர்பில் பொதுநலவாய நாடுகள் அமைப்போ, பிரான்ஸ் சட்டத்தரணிகள் சங்கமோ நீதியமைச்சுக்கு கடிதம் அனுப்பவில்லை. நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் பயனுடைய வகையில் சட்டமியற்றும் உரிமை அரசாங்கத்துக்கு உண்டு. அது இராச்சியத்தின் பொறுப்பு; அது மக்களின் அபிலாஷையாகும் என்றார்.












