ஏ.எச்.ஏ. ஹுஸைன் கடந்த நான்கு மாதங்களாகக் கடும் வறட்சியும், நாட்டின் அதிகூடிய வெப்பநிலையும் நிலவி வந்த மட்டக்களப்பு மாவட்டத்தில், ஞாயிற்றுக்கிழமை (02.08.2026) இரவு இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. இந்த திடீர் மழையினால் அப்பகுதியில் நீண்ட நாட்களாக நிலவிய அனல் வெப்பக் க…
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
கடந்த நான்கு மாதங்களாகக் கடும் வறட்சியும், நாட்டின் அதிகூடிய வெப்பநிலையும் நிலவி வந்த மட்டக்களப்பு மாவட்டத்தில், ஞாயிற்றுக்கிழமை (02.08.2026) இரவு இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. இந்த திடீர் மழையினால் அப்பகுதியில் நீண்ட நாட்களாக நிலவிய அனல் வெப்பக் காலநிலை தணிந்துள்ளது.
திங்கட்கிழமை காலை 8 மணி வரை பதிவான 24 மணித்தியால காலப்பகுதியில், மட்டக்களப்பு வளிமண்டலவியல் திணைக்கள அவதானிப்பு நிலையத்தின் தரவுகளின்படி, 47.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
மழை பெய்யத் தொடங்கிய ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி வரை, மட்டக்களப்பு மாவட்டமே நாட்டின் அதிகூடிய வெப்பநிலையை அதாவது 37.2 பாகை செல்சியஸ் வெப்பநிலையைப் பதிவு செய்திருந்தது. இந்த கடும் வெப்பத்தின் உச்சக்கட்டத்திலேயே இந்த மழை பெய்துள்ளது.
மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாத நடுப்பகுதியில் கடைசியாகச் சிறிதளவு மழை வீழ்ச்சி கிடைத்திருந்தது. அதன் பின்னர், நேற்று முன்தினம் இரவுதான் சுமார் இரண்டு மணி நேரம் பலத்த மழை பெய்துள்ளது. இந்த மழையின் காரணமாக மக்களின் கடும் சிரமத்தைக் கொடுத்த உஷ்ணமான சூழல் தணிந்துள்ளதுடன், கிணறுகள், குளங்கள், ஆறுகள் மற்றும் வாவியிலும் ஏனைய நீர் நிலைகளிலும் ஓரளவுக்கு நீர் தேங்கியுள்ளது.
தொடர்ச்சியாகக் கடந்த சில நாட்களாகத் தாங்க முடியாத அளவுக்குத் தகிக்கும் வெப்பத்துடன் கூடிய பலத்த அனல் காற்று வீசியமையால், மனிதர்கள், விலங்குகள் மற்றும் தாவரங்கள் மிகுந்த அசௌகரியத்தை எதிர்நோக்கியிருந்தன. இந்த நிலையில் பெய்துள்ள கன மழை அவர்களுக்குப் பெரும் ஆறுதலளிப்பதாக அமைந்தது.
இந்த அனல் வெப்பக் காலநிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. கட்டட நிர்மாணத் தொழிலாளர்கள், திறந்தவெளிகளில் வேலை செய்வோர், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் மைதானங்களில் விளையாடுவோர் மிகவும் சிரமப்பட்டனர். அதேவேளை, கடலில் மீன்பிடி நடவடிக்கைகளும் கணிசமாகக் குறைந்திருந்தது.
மேலும், பலமாக வீசிய அனல் காற்றினால் குப்பை மேடுகள் புரண்டு வீசியதுடன், விவசாயப் பயிர்கள், மரங்களின் இலைகள் மற்றும் கிளைகளும் முறிந்து விழுந்தன. வீடுவாசல்கள், கிணறுகள் மற்றும் நீர் நிலைகளில் தூசுகளும், குப்பைகளும், புழுதியும் படியும் நிலை ஏற்பட்டிருந்தது. தகரங்களாலான அடைப்புகள், வீடுகள் மற்றும் கொட்டில்களையும் இந்த பலத்த அனல் காற்று சேதப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.







-558349_850x460.jpg)
-558350_850x460.jpg)



