பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் முறைகேடுகளுடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்படும் 461 உத்தியோகத்தர்களின் பரீட்சைக் கடமைகள் தடை செய்யப்பட்டு, அவர்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாய…

பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் முறைகேடுகளுடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்படும் 461 உத்தியோகத்தர்களின் பரீட்சைக் கடமைகள் தடை செய்யப்பட்டு, அவர்கள் கருப்புப் பட்டியலில்  சேர்க்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்களின் தகவல்கள், பரீட்சைக் கடமைகளுக்காக நியமனங்கள் வழங்கப்படும் போது பரிசீலிக்கப்படுவதில்லை என்பது கணக்காய்வின் போது கண்டறியப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பரீட்சைக் கடமைகளிலிருந்து தடை செய்யப்பட்ட 461 உத்தியோகத்தர்களில் 133 பேரின் தேசிய அடையாள அட்டை எண்களும், 182 உத்தியோகத்தர்களின் பணிப்பகிர்வு தடை ஆரம்பிக்கப்பட்ட திகதியும் கருப்புப் பட்டியலில் உள்ளடக்கப்படவில்லை எனவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

கடந்த வருடத்தின் நவம்பர் 21 ஆம் திகதியன்று, ஏழு வருடங்களுக்கும் அதிகமான காலம் கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த உத்தியோகத்தர்களின் பெயர்கள் கருப்புப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக, இந்த வருடத்தின் ஜூன் 5 ஆம் திகதியிட்ட கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அவ்வாறு நீக்கியது பட்டியலைப் பராமரிப்பதில் உள்ள குறைபாடுகளின் காரணமாகவே செய்யப்பட்டுள்ளது என கணக்காய்வு உத்தியோகத்தர்கள் அவதானித்துள்ளனர்.

இதன் காரணமாக, கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட உத்தியோகத்தர்கள் தொடர்ச்சியாகப் பரீட்சைக் கடமைகளில் ஈடுபடவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.