முஹம்மது நபி (ஸல்) அவர்களின் போதனைகளில் உள்ள விடுதலையின் அர்த்தம், அமைதிக்கான எதிர்பார்ப்பு, மனிதநேயத்தின் மீதான நம்பிக்கை மற்றும் ஏழைகள் மீதான போக்கு ஆகிய அனைத்தையும் நனவாக்கக் கூடிய அரசாங்கத்தை இன்று இந்நாட்டு மக்கள் இணைந்து கட்டியெழுப்பியுள்ளதாகவும், அது எதிர்வரும் காலங்களிலு…
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் போதனைகளில் உள்ள விடுதலையின் அர்த்தம், அமைதிக்கான எதிர்பார்ப்பு, மனிதநேயத்தின் மீதான நம்பிக்கை மற்றும் ஏழைகள் மீதான போக்கு ஆகிய அனைத்தையும் நனவாக்கக் கூடிய அரசாங்கத்தை இன்று இந்நாட்டு மக்கள் இணைந்து கட்டியெழுப்பியுள்ளதாகவும், அது எதிர்வரும் காலங்களிலும் மக்கள் சக்தியிலேயே தங்கியிருக்கும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
நீர்கொழும்பு அல் - ஹிலால் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று (26) பிற்பகல் நடைபெற்ற 42 ஆவது தேசிய மீலாதுன் நபி அரச விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இந்நாட்டை வளர்ச்சியடைந்த, சிறந்த நாடாக கட்டியெழுப்புவதில் வேறு எந்த சக்தியையும் விட மக்கள் சக்தி மீது பலமான நம்பிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும், தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு பாதகமான எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்காது என்பதுடன், மக்களின் நலனுக்காக எடுக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் திரும்பப் பெறத் தயாராக இல்லை என்றும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.
புதிய அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் பொது மக்கள் மத்தியில் சட்டத்தின் மீதான நம்பிக்கையையும், நீதி வழங்கலை செயற்திறனாக மேற்கொள்வதையே எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். நாட்டை கட்டியெழுப்புவதற்கான மிக முக்கியமான அடித்தளமான தேசிய ஒற்றுமைக்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் அதேவேளை, சர்வதேச ரீதியில் கௌரவமும் அங்கீகாரமும் பெற்ற ஒரு நாடாக இலங்கையை மீண்டும் உயர்த்துவதற்கும், நபி நாயகம் அவர்களின் போதனையான "சட்டத்தின் முன் அனைவரும் சமம்" என்பதற்கு உயிர் கொடுப்பதற்கும் அரசாங்கம் கடந்த காலத்தில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இந்த அரச விழாவை புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சும், முஸ்லிம் சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
இதன் போது கம்பஹா மாவட்ட பள்ளிவாசல்களில் பல ஆண்டுகளாக சமயப் பணிகளைச் செய்வதற்காகத் தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்த மௌலவிமார், சமூகத்திற்கு ஆற்றிய சேவையையும் ஜனாதிபதி இதன் போது பாராட்டி கௌரவித்தார். மேலும், தேசிய மிலாதுன் நபி விழாவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாடசாலை மட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசில்களையும் ஜனாதிபதி அவர்கள் வழங்கினார். 2026 தேசிய மீலாதுன் நபி அரச விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட ஞாபகார்த்த முத்திரை மற்றும் கடிதஉறை மற்றும் கம்பஹா மாவட்ட முஸ்லிம்களின் வரலாறு தொடர்பான நூல் மற்றும் மீலாதுன் நபி நினைவு மலர் என்பனவும் ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டன.
விழாவின் போது பிரதேச மக்கள் சார்பாக ஜனாதிபதியை கௌரவிக்கும் வகையில் நினைவுச் சின்னமொன்றும் வழங்கப்பட்டது. (a)












