நிலவும் சீரற்ற வானிலை காரணமாக களனி கங்கையை அண்மித்த பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 48 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, குறித்த எச்சரிக்கை எதிர்வரும் 5ஆம் திகதி காலை 11.30 மணி வரை அமலில் இருக்…

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக களனி கங்கையை அண்மித்த பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 48 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, குறித்த எச்சரிக்கை எதிர்வரும் 5ஆம் திகதி காலை 11.30 மணி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், களனி கங்கையை அண்மித்த பகுதிகளில் உள்ள உப வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கண்டி மாவட்டத்தின் உடுநுவர, உடபலாத்த, யட்டிநுவர, தொலுவ, கொத்மலை, பஸ்பாகே கோரளை, கங்க இஹல கோரளை, கங்கவட்ட கோரளை, ஹரிஸ்பத்துவ மற்றும் பஹத்ததும்பர பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட தாழ்வான பகுதிகளில் அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மகாவலி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.