பொருட்களை இறக்குமதி செய்ததாக போலியான ஆவணங்களை சமர்ப்பித்து, இலங்கையிலிருந்து 700 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான நிதியை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பியதாகக் கூறப்படும் பாரிய நிதி மோசடி தொடர்பான விசாரணையில், பிரபல ஆடை விற்பனை நிறுவனமான House of Fashion-க்கும் தொடர…

பொருட்களை இறக்குமதி செய்ததாக போலியான ஆவணங்களை சமர்ப்பித்து, இலங்கையிலிருந்து 700 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான நிதியை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பியதாகக் கூறப்படும் பாரிய நிதி மோசடி தொடர்பான விசாரணையில், பிரபல ஆடை விற்பனை நிறுவனமான House of Fashion-க்கும் தொடர்பு இருப்பதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) கொழும்பு முதன்மை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்த விசாரணையின் போது, மோசடியில் தொடர்புடையதாக அடையாளம் காணப்பட்டுள்ள 21 முக்கிய நிறுவனங்களில் 6 நிறுவனங்களின் தொடர்பு இதுவரை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக CID நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.

இதனிடையே, A.Y. Investment நிறுவனத்தின் பணிப்பாளரான ஃபெஸ்லி முகமது என்பவர் முக்கிய சந்தேகநபராக கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து கணிசமான அளவிலான அமெரிக்க டொலர்கள், சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு வாகனம் மற்றும் தங்கப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக விசாரணைகள் தெரிவிக்கின்றன.

மேலும், சந்தேகநபரின் வங்கி கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டபோது, 10,156 முறை வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பப்பட்டிருந்தாலும், அதனுடன் தொடர்புடைய எந்தவொரு இறக்குமதி பொருட்களும் இலங்கைக்கு வரவில்லை என்பது சுங்கத் திணைக்கள பதிவுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளதால், கைது செய்யப்பட்டுள்ள ஃபெஸ்லி முகமதுவை எதிர்வரும் மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு முதன்மை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.