ஏமனின் அல்-மகா துறைமுகத்தின் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலை "பயங்கரவாதத் தாக்குதல்" என அந்நாட்டு அரசு கடுமையாகக் கண்டித்துள்ளதாக ‘சபா’ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தைஸ் மாகாணத்தில் உள்ள முக்கிய துறைமுகத்தைக் குறிவ…

ஏமனின் அல்-மகா துறைமுகத்தின் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலை "பயங்கரவாதத் தாக்குதல்" என அந்நாட்டு அரசு கடுமையாகக் கண்டித்துள்ளதாக ‘சபா’ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தைஸ் மாகாணத்தில் உள்ள முக்கிய துறைமுகத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட இத்தாக்குதல், நாட்டின் உட்கட்டமைப்புகளையும் பொருளாதாரத்தையும் சீர்குலைக்கும் ஹவுதிகளின் திட்டமிட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதி என ஏமன் அரசு குற்றஞ்சாட்டியுள்ளது. அரசாங்கம் ஏமன் மீது பொருளாதாரத் தடை விதிப்பதாகப் பொய்யான பிரசாரத்தைச் செய்யும் ஹவுதிகள், மறுபுறம் நாட்டின் பொது மற்றும் பொருளாதார மையங்கள் மீது தாக்குதல் நடத்துவது அவர்களின் போலித்தனத்தைக் காட்டுவதாக அரசு சாடியுள்ளது.இத்தாக்குதலானது அரசு, சமூகம் மற்றும் தேசிய பொருளாதாரத்திற்கு எதிராக நடத்தப்பட்ட போர்ப் பிரகடனமாகும். ஹவுதி அமைப்பினருக்கு ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கி ஈரான் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. இந்தத் தாக்குதல்களின் அச்சுறுத்தல் இப்போது ஏமனுடன் மட்டும் நின்றுவிடாமல், பிராந்திய மற்றும் சர்வதேசப் பாதுகாப்புக்கும், முக்கிய செங்கடல் கப்பல் போக்குவரத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. துறைமுகங்கள் மற்றும் நாட்டின் அதிமுக்கிய மையங்களைப் பாதுகாக்க அரசு தனது "தேசிய மற்றும் அரசியலமைப்புப் பொறுப்புகளை" முழுமையாகச் செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெறுமனே கண்டன அறிக்கைகளை வெளியிடுவதோடு நின்றுவிடாமல், ஹவுதி அமைப்பிற்கான நிதி ஆதாரங்கள் மற்றும் ஆயுத விநியோகத்தை முற்றிலும் துண்டிக்கச் சர்வதேச சமூகம் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் ஏமன் அரசு வலியுறுத்தியுள்ளது.