கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பெரியநீலாவணை பகுதியில் மீனவர்களுக்கான பல்தேவை கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக கடல் தொழில் அமைச்சர் இரா சந்திரசேகரம் அவர்களின் விஜயம் தொடர்பாக உள்ளூர் நிர்வாகத்திற்கும், பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர…

கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பெரியநீலாவணை பகுதியில் மீனவர்களுக்கான பல்தேவை கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக கடல் தொழில் அமைச்சர் இரா சந்திரசேகரம் அவர்களின் விஜயம் தொடர்பாக உள்ளூர் நிர்வாகத்திற்கும், பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர் அமைப்புகளுக்கும் போதிய தகவல் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

பெரியநீலாவணை கிராமத்தில் மீனவர்களின் நலனை கருத்திற்கொண்டு பல்தேவை கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், கடற்றொழில் அமைச்சரின் இந்த விஜயம் தொடர்பில் கல்முனை வடக்கு பிரதேச செயலாளருக்கும் முறையான அறிவித்தல் வழங்கப்பட்டதா என்பது தொடர்பில் தற்போது கேள்விகள் எழுந்துள்ளன.

இந்த அரசாங்கமும் அமைச்சர்களும் மக்களின் நலன் கருதி செயற்படுகின்றபோது ஏற்பாட்டாளர்கள் விடும் தவறுகளால் மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படுகின்றது.

அத்துடன், கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த கடல் தொழில் மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு அமைச்சரை நேரடியாக சந்தித்து தமது பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளை முன்வைப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மீனவர்களின் நலனுக்காக அமைக்கப்படவுள்ள கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெறும் சந்தர்ப்பத்தில், அப்பகுதி மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் சமூகப் பிரதிநிதிகளுடன் அமைச்சர் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

குறிப்பாக, கல்முனை பிரதேச மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், கடற்றொழில் வளங்களைப் பாதுகாத்தல், மீன்பிடித் தொழிலுக்கான வசதிகள், கடற்றொழில் உபகரணங்கள் மற்றும் வாழ்வாதாரச் சிக்கல்கள் போன்ற பல்வேறு விடயங்களை அமைச்சரிடம் நேரடியாக எடுத்துரைப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்காதது கவலைக்குரிய விடயமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சரின் விஜயம் மக்களுக்கான ஒரு முக்கியமான சந்தர்ப்பமாக அமைந்திருந்த நிலையில், அந்த நிகழ்வில் உள்ளூர் நிர்வாகம், மீனவர் அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் பங்கேற்பு ஏன் உரிய முறையில் உறுதி செய்யப்படவில்லை என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

எனவே, இவ்வாறான அரசாங்க அமைச்சர்களின் பிரதேச விஜயங்கள் எதிர்காலத்தில் இடம்பெறும் போது, சம்பந்தப்பட்ட பிரதேச நிர்வாகம், மீனவர் சங்கங்கள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்களுக்கு முன்கூட்டியே முறையான தகவல் வழங்கப்பட்டு, அவர்களது கருத்துக்களையும் கோரிக்கைகளையும் அமைச்சரிடம் முன்வைப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என பிரதேச மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் மக்களின் பங்கேற்புடனும் வெளிப்படைத்தன்மையுடனும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.