அமெரிக்காவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையும் தற்போது நடைபெறவில்லை என ஈரான் திங்கள்கிழமை அதிரடியாக அறிவித்துள்ளது. அத்தகைய சந்திப்புகளுக்கு எவ்விதத் திட்டமும் இல்லை என மேலும் தெரிவித்துள்ளது. தாக்குதல்களைத் ஒத்தி வைப்பதற்கு இருதரப்பு பேச்சுவார்த்தையே காரணம் எனக் கூறிவந்த அமெரிக்க ஜ…
அமெரிக்காவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையும் தற்போது நடைபெறவில்லை என ஈரான் திங்கள்கிழமை அதிரடியாக அறிவித்துள்ளது. அத்தகைய சந்திப்புகளுக்கு எவ்விதத் திட்டமும் இல்லை என மேலும் தெரிவித்துள்ளது. தாக்குதல்களைத் ஒத்தி வைப்பதற்கு இருதரப்பு பேச்சுவார்த்தையே காரணம் எனக் கூறிவந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கூற்றுக்கு முற்றிலும் மாறாக ஈரானின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த ஐந்து மாதங்களாகத் தொடர்ந்து வரும் போக்கைப் போலவே, ஈரானின் மீது "மிகப்பெரிய தாக்குதல்களை" நடத்தத் திட்டமிடுவதாக அறிவிப்பதும், பின்னர் கடைசி நிமிடத்தில் அதை ரத்து செய்வதும் ஜனாதிபதி ட்ரம்ப்பின் வாடிக்கையாக மாறியுள்ளது. நான் மக்களைக் கொல்வதை விரும்பவில்லை; மாறாக ஒப்பந்தம் செய்வதையே விரும்புகிறேன். தற்போது நாங்கள இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். திங்கள்கிழமை பிற்பகல் பேச்சுவார்த்தை தொடங்கும்" என டிரம்ப் குறிப்பிட்டிருந்தார். ட்ரம்ப்பின் இந்த அறிக்கையை ஈரானிய வெளியுறவு அமைச்சு பேச்சாளர் இஸ்மாயில் பாகேய் திட்டவட்டமாக நிராகரித்தார். அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும், எந்தச் சந்திப்புகளும் அட்டவணைப்படுத்தப்படவில்லை என்றும் அவர் கூறினார். வெளிநாட்டுப் பிரதிநிதிகளைச் சந்திக்கவோ அல்லது தூதுவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பவோ ஈரானுக்கு எவ்விதத் திட்டமும் இல்லை. ஈரானியப் பிரதிநிதிகள் அனைவரும் நாட்டிற்குள்ளேயே உள்ளனர்; வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி மட்டும் ஈராக்கிற்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்டுள்ளார். தற்போதைய நிலையில், ஹோர்முஸ் நீரிணை மேலாண்மை குறித்து 'ஓமன்' நாட்டுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று பாகேய் தெளிவுபடுத்தினார். ஈரானின் மறுப்பைத் தொடர்ந்து, தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்ட ட்ரம்ப், ஈரானியத் தலைமையை "நம்பமுடியாத வஞ்சகம் நிறைந்தது" என்று கடுமையாகச் சாடினார். ஈரான் தரப்பிலிருந்து தான் சந்திப்பு கேட்கப்பட்டதாகவும், மிக விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறும் என அவர் மீண்டும் தெரிவித்துள்ளார். மேலும், உலகளாவிய எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு செல்லும் முக்கியப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கக் கடற்படை முழுமையாகக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக ட்ரம்ப் கூறினார்.












