நாடாளுமன்றத்தில் மக்கள் நலன் சார்ந்த மற்றும் நாட்டின் முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவைக்கு வராமல் தட்டிக் கழிக்கின்றனர் என்று யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றம் சாட்டினார். மக்கள் பிரதிநிதிகளா…
நாடாளுமன்றத்தில் மக்கள் நலன் சார்ந்த மற்றும் நாட்டின் முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவைக்கு வராமல் தட்டிக் கழிக்கின்றனர் என்று யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றம் சாட்டினார்.
மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்வாகி வந்தவர்கள் தங்கள் கடமையைச் சரியாகச் செய்யத் தவறுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய இறுதி உரையின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.பகிரங்க மன்னிப்பு அவர் மேலும் உரையாற்றுகையில்,
"நாட்டின் முக்கியப் பிரச்சினைகள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த விவாதங்களின் போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவைக்குச் சமூகமளிக்காமல் தட்டிக் கழிக்கின்றனர்.
கடந்த 2021ஆம் ஆண்டில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் தீப்பற்றி எரிந்ததால் நாட்டின் கடல் சூழலியலுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நாட்டுக்குச் சட்டபூர்வமாகக் கிடைக்க வேண்டிய பில்லியன் கணக்கிலான அமெரிக்க டொலர் இழப்பீட்டுத் தொகை, அதிகாரத் தரப்பினரின் முறையற்ற தலையீடுகள் காரணமாக மிகக் குறைந்த தொகையாகக் குறைக்கப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளார். இதுவே நாடாளுமன்றத்தில் தான் ஆற்றும் கடைசி உரையாக இருக்கலாம் எனக் குறிப்பிட்ட அவர், சபை நடவடிக்கைகளின் போது அல்லது தனது பேச்சினால் யாருடைய மனமாவது புண்பட்டிருந்தால் அல்லது அவையின் கண்ணியத்துக்கு ஏதேனும் பங்கம் ஏற்பட்டிருந்தால், அதற்குச் சபையில் உள்ள அனைத்து உறுப்பினர்களிடமும் மனப்பூர்வமாக மன்னிப்புக் கோருவதாகத் தெரிவித்தார்.
கடந்த காலப் போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உண்மையான குரலாகத் தான் நாடாளுமன்றத்தில் இயங்குவதாகக் குறிப்பிட்ட அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தகுந்த நீதியும் நிவாரணமும் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
நாட்டின் பொருளாதாரச் சீரழிவு மற்றும் சட்டவிரோதச் செயல்களுக்குப் பொறுப்பானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.












