எஸ்.கௌசல்யா இயற்கை அனர்த்தங்கள் மற்றும் நெருக்கடியான சூழ்நிலைகளில் மனிதநேயம் எவ்வாறு இருவேறு முகங்களைக் காட்டுகிறது என்பதற்குச் சமீபத்திய நிகழ்வுகள் சிறந்த சாட்சியாக அமைகின்றன. வட்டவளையில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட யுவதியைக் காப்பாற்றிய இளைஞர்களின் செயலும், நாவலப்பிட்டியில்…

எஸ்.கௌசல்யா

இயற்கை அனர்த்தங்கள் மற்றும் நெருக்கடியான சூழ்நிலைகளில் மனிதநேயம் எவ்வாறு இருவேறு முகங்களைக் காட்டுகிறது என்பதற்குச் சமீபத்திய நிகழ்வுகள் சிறந்த சாட்சியாக அமைகின்றன. வட்டவளையில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட யுவதியைக் காப்பாற்றிய இளைஞர்களின் செயலும், நாவலப்பிட்டியில் வெள்ளத்தில் சிக்கிய பேருந்துப் பயணிகளைத் துணிச்சலுடன் மீட்டவர்களின் செயலும் மனிதநேயம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதைக் பறைசாற்றுகின்றன.

ஆனால், மறுபுறம் குயில்வத்தை மண்சரிவுப் பகுதியில் நடுவழியில் தவித்த அப்பாவிப் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் மற்றும் பொதிகளுக்குக் கூலி கேட்டுச் சுரண்டிய சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. ஆபத்தில் உயிரைக் கொடுத்து உதவும் உன்னத மனிதர்களும், அதே ஆபத்தைப் பயன்படுத்தி ஏழை மக்களை உறிஞ்சிப் பிழைக்கும் பேராசை பிடித்த மனிதர்களும் ஒரே சமூகத்தில் வாழ்வது வேதனைக்குரியது.

சீரற்ற காலநிலை காரணமாக வடக்கிலிருந்து வந்த தனியார் பேருந்தில் பயணித்த மக்கள் கடும் அவதிக்குள்ளாகி சம்பவம், செவ்வாய்க்கிழமை (04) அன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த செவ்வாய்க்கிழமை (04) அன்று, ஹட்டன் - குயில்வத்தை பகுதியில் ஏற்பட்ட மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் அப்பேருந்து ஹட்டன் நோக்கிச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

அதன் காரணமாக முப்பதுக்கும் மேற்பட்ட பயணிகள் சிறிய ரக மினி பேருந்து மூலம் குறிப்பிட்ட குயில்வத்தை பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்தனர். அப்போது தலா ஒரு பயணியிடம் 400/= ரூபாய் கட்டணம் அறவிடப்பட்ட போதிலும், பயணிகள் கொண்டுவந்த பொதிகளுக்கு ரூபாய் 100/= முதல் 200/= வரை கூடுதல் கட்டணம் அறவிட்டுள்ளனர்.

தாங்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து ஹட்டன் வரை முழுமையான கட்டணமாக 2700/= செலுத்தி வந்த நிலையில், இந்த மண் சரிவு காரணமாக வேறு ஒரு சிறிய ரக மினி பேருந்தைக் குறித்த தனியார் பேருந்து நடத்துநர் ஏற்பாடு செய்து கொடுத்த போதிலும், எம்மிடம் ஏற்கெனவே வசூலிக்கப்பட்ட பயணப் பணத்திலிருந்து அதற்கான கட்டணத்தை வழங்காமல், மேலும் பயணிகளிடம் இருந்து அதிகளவு கட்டணம் அறவிடப்பட்டுள்ளது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் இருந்து அரச பேருந்து மூலம் வருகை தந்திருந்தால் பயணிகளுக்கு எவ்விதக் கட்டணமும் இன்றி மேலதிக சிறிய ரக அரச பேருந்து மூலம் குறிப்பிட்ட குயில்வத்தை பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி வந்து இருக்க முடியும். குயில்வத்தை பகுதியில் இருந்து ஹட்டன் நகரத்திற்கு 60 ரூபாய் மாத்திரமே பஸ் கட்டணமாக அறவிடப்படுகிறது. ஹட்டன் அரச பேருந்து நிலையத்தின் மாத வருமானம் 9 கோடி ரூபாவாகும். மேலும் வருமானம் பெற, ஹட்டன் - யாழ்ப்பாணம் அரச பேருந்து சேவைகளை நடத்துவதற்கு உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அனர்த்த நேரங்களில் நடைபெறும் முறைக்கேடான சம்பவங்கள்:

• பேருந்துப் பயணிகளிடம் கொள்ளை: இயற்கை இடர்பாடுகளும் மண்சரிவுகளும் ஏற்பட்டுப் பயணிகள் நடுவழியில் தவிக்கும் வேளைகளில், மனிதாபிமானமின்றி மாற்றுப் போக்குவரத்துகளுக்கு அதிகப்படியான கட்டணம் மற்றும் பொதிகளுக்குக் கூலி கேட்டு மக்களைச் சுரண்டுவது தொடர்கிறது.

• அவசர காலப் பயணச் சீட்டு மோசடி: இயலாமையைச் சாதகமாகப் பயன்படுத்தி, குறுகிய தூரப் பயணங்களுக்குக்கூட பலமடங்கு கட்டணம் வசூலிக்கும் சட்டவிரோதச் செயல்களில் சில தனியார் போக்குவரத்து நடத்துநர்கள் ஈடுபடுகின்றனர்.

மனிதநேயத்தின் ஒளிரும் பக்கங்கள்:

சமூகத்தில் மக்களைச் சுரண்டும் ஒருசிலர் இருக்கும் அதேவேளை, ஆபத்துக்காலத்தில் உயிரைப் பாதுகாக்க உதவும் மாமனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். நாவலப்பிட்டி - அம்பகமுவை பகுதியில் பெய்த கனமழை காரணமாக அம்பகமுவ ஓயா வான்பாய்ந்து ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில், பயணிகள் பேருந்து ஒன்று நீரோட்டத்தில் சிக்கித் தவித்தது. அந்த ஆபத்தான சூழ்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் லொறி மற்றும் கெப் வாகனங்களின் உதவியுடன் துணிச்சலாகச் செயல்பட்டுப் பேருந்தில் இருந்த அனைத்துப் பயணிகளையும் பாதுகாப்பாக மீட்டனர். இத்தகைய முன்மாதிரியான செயல்கள் மனிதநேயம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதைக் காட்டுகின்றன.

"உள்ளத்தால் நல்ல உள்ளம் யாவும் ஒன்றைப்போல் தருவதில்லை - ஊருக்கென்று வாழும்கண்டு உண்மை யாவும் மறைவதில்லை" மற்றும் "அவதியுறும் வேளையிலும் அறுவடை செய்யும் பேராசை" என்பதற்கு இத்தகைய சம்பவங்களே சான்றாகும்.