மலையகத்தின் மூத்த தொழிற்சங்க, அரசியல்வாதியும் இலக்கியவாதியுமான 'மாத்தளை ரோகிணி' என அழைக்கப்படும் தவசி அய்யாத்துரை தனது 85 ஆவது வயதில் சனிக்கிழமை (24) அன்று காலமானார். கம்பளையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், சென். அன்றூஸ் கல்லூரியில் கல்வி பயின்றதோடு, குடும்பச் சூழ்நிலைகள் காரணமாகத்…

மலையகத்தின் மூத்த தொழிற்சங்க, அரசியல்வாதியும் இலக்கியவாதியுமான 'மாத்தளை ரோகிணி' என அழைக்கப்படும் தவசி அய்யாத்துரை தனது 85 ஆவது வயதில் சனிக்கிழமை (24) அன்று காலமானார்.

கம்பளையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், சென். அன்றூஸ் கல்லூரியில் கல்வி பயின்றதோடு, குடும்பச் சூழ்நிலைகள் காரணமாகத் தனது தந்தையின் வழியில் தோட்டத் தொழிலாளியானார்.

ஆனாலும், உழைக்கும் வர்க்க விடுதலைச் சிந்தனைகளில் ஈர்க்கப்பட்ட இவர், தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர் வி. கே. வெள்ளையனின் பணிகளால் ஈர்க்கப்பட்டு தொழிற்சங்கப் பணிகளில் ஈடுபடலானார். இவரது தலைமைத்துவ ஆற்றலைக் கண்ட வி. கே. வெள்ளையன், தனக்குப் பின்னால் சங்கத்தின் தலைமைத்துவப் பொறுப்பை ஏற்கும் அளவுக்கு இவரை வளர்த்தெடுத்தார். சங்கத்தின் மதியுரைஞரான சி. வி. வேலுப்பிள்ளையுடன் ஏற்பட்ட நெருக்கத்தால் ஓர் எழுத்தாளராகவும் தன்னைப்புடம் போட்டுக் கொண்டார்.

நீண்டகாலமாக வாக்குரிமை பறிக்கப்பட்டிருந்த நிலையில், 1977 ஆம் ஆண்டு மலையக மக்கள் தேர்தலில் பங்குபெறும் வாய்ப்பு கிட்டியபோது, 1977 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் நுவரெலியா - மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் ஏணி சின்னத்தில் போட்டியிட்டார். 1995 - 1999 காலப்பகுதியில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மயில் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று, மத்திய மாகாண சபை உறுப்பினராகவும் இயங்கினார். பின்னாளில், ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கம், மலையக தொழிலாளர் முன்னணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போன்ற அமைப்புகள் ஊடாகத் தனது தொழிற்சங்கப் பணிகளைத் தொடர்ந்தாலும், தொழிலாளர் தேசிய சங்கத்தில் இணைந்திருந்த சுமார் 30 ஆண்டுகாலப் பயணமே அவருக்கான அடையாளமாகிறது.

'இதயத்தில் இணைந்த இரு மலர்கள்' போன்ற தொடர்கதைகளை வார இதழ்களில் எழுதினாலும், மலையக மக்கள் போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த போராளிகள் குறித்த இவரது ஆய்வு நூலான 'உரிமைப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகள்' எனும் நூலே, இவரது எழுத்துலகின் மகுடமாவதோடு மலையக வரலாற்றிலும் முக்கியத்துவம் பெறுகிறது.

வயது மூப்பு காரணமாகக் காலமான இவரது இறுதிக் கிரியைகள், 26.07.2026 ஞாயிற்றுக்கிழமை பகல் 1 மணிக்கு மாத்தளை, களுதாவளையில் இடம்பெறும்.