மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற “சமகால அரசியலும் போராளிகளின் வகிபாகமும்” என்ற கருத்தரங்கில் உரையாற்றிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் முன்வைக்கப்பட்டதாக…

மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற “சமகால அரசியலும் போராளிகளின் வகிபாகமும்” என்ற கருத்தரங்கில் உரையாற்றிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் முன்வைக்கப்பட்டதாகக் கூறப்படும் ‘ஏக்கிய இராஜ்ய’ அரசியல் அமைப்பை மீண்டும் நடைமுறைப்படுத்தும் நோக்கிலேயே ஆறு தமிழ் அரசியல் கட்சிகள் இணைந்து செயல்படுகின்றன என்று குற்றஞ்சாட்டினார்.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு மாறாக 1972 மற்றும் 1978 அரசியல் அமைப்புகள் நிறைவேற்றப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், அந்த ஒற்றையாட்சி அரசியல் அமைப்பே தமிழர்களின் அரசியல், சமூக மற்றும் நில உரிமைப் பிரச்சினைகளுக்கு அடிப்படைக் காரணமாக இருந்ததாக தெரிவித்தார். 1987 இந்திய–இலங்கை ஒப்பந்தமும் தமிழ் மக்களின் விருப்பத்திற்கு அமைவாக அமையவில்லை என்றும் அவர் விமர்சித்தார்.

வடக்கு–கிழக்கில் மயிலத்தமடு மேய்ச்சல் தரை, கன்னியா வெந்நீரூற்று, தாந்தாமலை, மயிலிட்டி உள்ளிட்ட பகுதிகளில் நில அபகரிப்பு மற்றும் புத்தவிகாரை அமைக்கும் நடவடிக்கைகள் தொடர்கின்றன என்றும், இதன் மூலம் தமிழர் தாயகத்தின் அடையாளம் படிப்படியாக மாற்றப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

அத்துடன், ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்ததையும் சுட்டிக்காட்டிய அவர், அந்த முயற்சிக்கு அரசியல் ஆதரவைப் பெறுவதற்காகவே ஆறு கட்சிகளின் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளதாக கூறினார். இந்த முயற்சியை தடுக்க அனைத்து தமிழ் அரசியல் கட்சிகள், முன்னாள் போராளிகள் மற்றும் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்; இல்லையெனில் பல தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களும் ஆயிரக்கணக்கான உயிர்த்தியாகங்களும் வீணாகிவிடும் என அவர் வலியுறுத்தினார்.

மேலும், ஊழல் ஒழிப்பு மற்றும் சட்ட அமுலாக்கம் போன்ற விடயங்களில் அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாகக் கூறிக்கொண்டிருக்கும் நிலையில், வடக்கு–கிழக்கில் தமிழர் நிலங்கள் மற்றும் உரிமைகள் தொடர்ந்து பாதிக்கப்படுவது ஏன் என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார். தற்போதைய அரசியல் சூழலில் தமிழ் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருந்து, தங்களது அரசியல் எதிர்காலம் தொடர்பான முடிவுகளை எடுக்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.