உலகளாவிய ரீதியில் தீவிர வானிலை நிலைமைகளை ஏற்படுத்தக் கூடிய எல் நினோ (El Niño) காலநிலை நிகழ்வின் தாக்கம் காரணமாக, ஏற்படக்கூடிய கடுமையான வானிலை தாக்கங்களுக்கு இலங்கை தயாராக வேண்டும் என மூத்த காலநிலை நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார். ஊடகங்களிடம் பேசிய பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மூத…
உலகளாவிய ரீதியில் தீவிர வானிலை நிலைமைகளை ஏற்படுத்தக் கூடிய எல் நினோ (El Niño) காலநிலை நிகழ்வின் தாக்கம் காரணமாக, ஏற்படக்கூடிய கடுமையான வானிலை தாக்கங்களுக்கு இலங்கை தயாராக வேண்டும் என மூத்த காலநிலை நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
ஊடகங்களிடம் பேசிய பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர் புத்தி மரம்பே, பசிபிக் பெருங்கடலில் தற்போது உருவாகி வரும் எல் நினோ நிகழ்வு பலவீனமான நிலையில்தான் உள்ளது எனவும், எனினும் அது வரவிருக்கும் மாதங்களில் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் தெரிவித்தார்.
எல் நினோ என்பது மத்திய மற்றும் கிழக்கு வெப்பமண்டல பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு நீர் அசாதாரணமாக வெப்பமடைவதால் ஏற்படும் இயற்கையான காலநிலை வடிவமாகும். இது உலகளாவிய ரீதியில் சாதாரண வானிலை முறைகளைப் சீர்குலைக்கக் கூடியது. இது பெரும்பாலும் சில பகுதிகளில் வறட்சியையும், வேறு சில பகுதிகளில் அதிகப்படியான மழை மற்றும் வெள்ளப்பெருக்கையும் ஏற்படுத்துவதுடன், விவசாயம், நீர் வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளிலும் தாக்கங்களை ஏற்படுத்துகிறது.
இலங்கையின் பல பகுதிகள் ஏற்கனவே கடுமையான உலர் வானிலை நிலமைகளை எதிர்கொண்டு வருவதாகவும், விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளமையால் நீராதாரங்கள் வண்டு போய்விட்டதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர் எனவும் பேராசிரியர் மரம்பே கூறினார்.
இதற்கிடையில், எல் நினோ தொடர்பான காலநிலை மாற்றங்களால் ஏற்படக்கூடிய சாத்தியமான பேரழிவுகளை எதிர்கொள்வதற்கான திட்டங்களை அதிகாரிகள் தயாரித்து வருவதாக அனர்த்த மேலாண்மை நிலையத்தின் (DMC) பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சம்பத் கொட்டுவெகொடை தெரிவித்தார்.
பொது நிதிக் குழுவின் முன், இலங்கையின் சாத்தியமான பேரிடர் சூழ்நிலைகளை முகங்கொடுக்கும் தயார்நிலை குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாடாளுமன்றச் சட்டத்தின் கீழ் தாடப்பட்ட அனர்த்த மேலாண்மை நிதியம் இதுவரை முழுமையாகச் செயற்படுத்தப்படவில்லை என்பதும் குழுக் கூட்டத்தின் போது வெளிப்படுத்தப்பட்டது.
இதேவேளை, எல் நினோ நிகழ்வு தொடர்ந்து வலுவடைந்து வருவதால், எதிர்வரும் மாதங்களில் இலங்கை குறிப்பிடத்தக்க வானிலை மாற்றங்களை அனுபவிக்கக் கூடும் என்றும், இதன் உச்சக்கட்டம் முன்னர் எதிர்வு கூறப்பட்டதை விட முன்னதாகவே எதிர்பார்க்கப்படுகிறது என்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் Dr. தம்மிக பட்டபெந்தி தெரிவித்தார்.












