எங்களின் பூர்வீகக் காணி அரச படைகளின் சரணாலயமா? எங்கள் நிலங்களைச் சுரண்ட இனியும் இடமளிக்க முடியாது என்ற வலுவான கோசத்துடன், வலிகாமம் வடக்கு – பலாலி பகுதியில் மீள்குடியேற முடியாத நிலையில் உள்ள மக்கள் இன்று 8ஆவது வாரமாகவும் அமைதிவழிப் போராட்டத்தை முன்னெடுத்தனர். பலாலி சந்தியில் நடைப…

எங்களின் பூர்வீகக் காணி அரச படைகளின் சரணாலயமா? எங்கள் நிலங்களைச் சுரண்ட இனியும் இடமளிக்க முடியாது என்ற வலுவான கோசத்துடன், வலிகாமம் வடக்கு – பலாலி பகுதியில் மீள்குடியேற முடியாத நிலையில் உள்ள மக்கள் இன்று 8ஆவது வாரமாகவும் அமைதிவழிப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

பலாலி சந்தியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், தமது பூர்வீக நிலங்களை உடனடியாக விடுவித்து, மீள்குடியேற்றத்துக்கு அரசாங்கம் வழிவகுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.

பல ஆண்டுகளாகத் தமது சொந்தக் காணிகளில் மீள்குடியேற முடியாத நிலையில் இருப்பதாகவும், காணிகள் அரச படைகளின் கட்டுப்பாட்டில் இருப்பதால் வாழ்வாதாரம், குடியிருப்பு மற்றும் எதிர்கால வாழ்வு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

'எங்கள் காணிகள் எங்களுக்கே வேண்டும்', 'பூர்வீக நிலங்களில் மீள்குடியேற அனுமதிக்க வேண்டும்', 'மக்களின் நிலங்களைச் சுரண்டுவதை நிறுத்த வேண்டும்' உள்ளிட்ட பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

தமது நிலங்களை விடுவிப்பதாகப் பல்வேறு சந்தர்ப்பங்களில் சம்பந்தப்பட்ட தரப்பினரால் உறுதிமொழிகள் வழங்கப்பட்ட போதிலும், நடைமுறையில் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டினர்.

இதனால் தொடர்ச்சியாகப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.