எப்பாவல லங்கா பொஸ்பேட் நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கில், 110 மில்லியன் ரூபாய் பெறுமதியான புதிய இயந்திரங்கள் மற்றும் செயல்பாட்டு வாகனங்கள் நிறுவனத்தின் பணிகளில் இணைக்கப்பட்டுள்ளன. புதிய உபகரணங்களை உத்தியோகபூர்வமாக பயன்பாட்டிற்கு கையளிக்கும்…

எப்பாவல லங்கா பொஸ்பேட் நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கில், 110 மில்லியன் ரூபாய் பெறுமதியான புதிய இயந்திரங்கள் மற்றும் செயல்பாட்டு வாகனங்கள் நிறுவனத்தின் பணிகளில் இணைக்கப்பட்டுள்ளன.

புதிய உபகரணங்களை உத்தியோகபூர்வமாக பயன்பாட்டிற்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று (27) தொழில்கள் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தியின் தலைமையில் நடைபெற்றது.

இதன்படி, 79 மில்லியன் ரூபாய் செலவில் இரண்டு வீல் லோடர்கள், 18 மில்லியன் ரூபாய் செலவில் இரண்டு டிப்பர் ரக வாகனங்கள் மற்றும் 13 மில்லியன் ரூபாய் செலவில் இரண்டு போர்க்லிஃப்ட் இயந்திரங்கள் நிறுவனத்தின் செயற்பாடுகளுக்காக புதிதாகக் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

நிறுவனத்தின் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் தெரிவு செய்யப்பட்ட புதிய சாரதிகளுக்கான நியமனக் கடிதங்களும் இதன்போது அமைச்சரால் வழங்கப்பட்டன.

இதேவேளை, கடந்த 20 மாதங்களில் எப்பாவல லங்கா பொஸ்பேட் நிறுவனம் பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக, 76 மில்லியன் ரூபாய் செலவில் புதிய முடிவுற்ற பொருட்களுக்கான களஞ்சியசாலை அமைக்கப்பட்டுள்ளதுடன், நீண்டகாலமாக செயலிழந்திருந்த டிராக்டர் இயந்திரமும் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அத்துடன், நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் மற்றும் Sales Hotline சேவையும் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நுகர்வோர் நம்பிக்கையை அதிகரிப்பதற்கும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கும் உற்பத்திகளின் அதிகபட்ச சில்லறை விலை அச்சிடும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், 2026–2030 புதிய மூலோபாயத் திட்டம் வெளியிடப்பட்டுள்ளதுடன், APM எண்ணெய் உரம் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டு, ERP Sample குறைந்த விலையில் வழங்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனுடன், Dealers Network பதிவுகளை முறைப்படுத்துதல் மற்றும் நிறுவனத்துக்குச் சொந்தமான லொறிகள் மூலம் உற்பத்திகளை நேரடியாக விநியோகிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நிலின் சமரகோன், எப்பாவல லங்கா பொஸ்பேட் நிறுவனத்தின் தலைவர் ஆனந்த பிரேமகுமார உள்ளிட்ட நிர்வாக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.