எதிர்க்கட்சி என்ன குற்றச்சாட்டுக்களை அடுக்கினாலும், மக்கள் எப்போதும் அநுர ஆட்சியுடன் இணைந்திருப்பார்கள் என்றும், எதிர்த்தரப்பு ஊழல்வாதிகளால் சூழப்பட்டுள்ளது என்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார். ஹட்டன் நகரில…

எதிர்க்கட்சி என்ன குற்றச்சாட்டுக்களை அடுக்கினாலும், மக்கள் எப்போதும் அநுர ஆட்சியுடன் இணைந்திருப்பார்கள் என்றும், எதிர்த்தரப்பு ஊழல்வாதிகளால் சூழப்பட்டுள்ளது என்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

ஹட்டன் நகரில் இன்று(26.07.2026) இடம்பெற்ற விசேட நிகழ்ச்சி ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஊழல்வாதிகளால் சூழப்பட்ட எதிர்க்கட்சி

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்குப் பின்னர், எதிர்க்கட்சி குழப்பத்தில் உள்ளன என்பது தெளிவாகின்றது.

அரசாங்கத்தைக் கவிழ்க்க சதி செய்வதற்குப் பதிலாக எதிர்க்கட்சித் தலைவர் ஒரு வலுவான எதிர்க்கட்சியை நிறுவ தேவையான நடவடிக்கைகளையும், பொறுப்புகளையும் உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும்.

மக்களை ஏமாற்றி, தன்னை ஒரு நகைச்சுவை நபர் போன்று காட்டிக் கொள்ளாமல் நான் கூறியதை செய்தால் மாற்றம் நிகழும்.

மேலும், சபையில் இருப்பவர்கள், பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் பல்வேறு ஊழல் வழக்குகளில் ஈடுபட்டவர்களால் எதிர்க்கட்சி இன்று சூழப்பட்டுள்ளது.

நாட்டின் மக்கள் குடியரசுத் தலைவருடனும் அரசாங்கத்துடனும் இருக்கிறார்கள். அவர்களில் 94.4 வீதம் தொழிலாளர்களே இருக்கிறார்கள்.

மலையக மாணவர்களுக்கான விசேட திட்டம்

அத்துடன், இலங்கையில் தேசிய கல்வி மட்டத்துடன் ஒப்பிடும்போது மலையகப் பகுதியில் கல்வி வளர்ச்சி தொடர்ச்சியாகப் பின்னடைவைச் சந்தித்து வருகின்றது. இதனால் பல்கலைக்கழக அனுமதி மற்றும் உயர்கல்வி அடைவு மட்டம் மலையக சமூகத்தில் குறைவாகவே உள்ளது.

இதன் காரணமாக 22 கோரிக்கை அடங்கிய முக்கிய செயல்களைச் விரைவில் முன்னெடுப்பது தொடர்பாக பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

அதில், ஆசிரியர் பற்றாக்குறை, பாடசாலைகளுக்கான காணி உரிமை மற்றும் தோட்டப்புறங்களின் உள்ள பாடசாலைகளுக்கு செல்லும் வீதிகள் அபிவிருத்தி திட்டங்களின் கீழ், வீதிப் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளவும் தீர்மானித்துள்ளோம் என்றார்.