ஆர்ஜென்டினாவில் காட்டுத்தீயை அணைக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, பயங்கரமான ஹெலிகாப்டர் விபத்தில் 7 பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர். சான் ஜுவான் பகுதியில், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தரையில் மோதி விபத்துக்குள்ளான இந்த ஹெலிகாப்டரில், பொலிஸ் அதிகாரிகளும் தீயணைப்பு வீரர்களும் பய…
ஆர்ஜென்டினாவில் காட்டுத்தீயை அணைக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, பயங்கரமான ஹெலிகாப்டர் விபத்தில் 7 பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
சான் ஜுவான் பகுதியில், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தரையில் மோதி விபத்துக்குள்ளான இந்த ஹெலிகாப்டரில், பொலிஸ் அதிகாரிகளும் தீயணைப்பு வீரர்களும் பயணித்துள்ளனர். பெல் 412 (Bell 412) ரகத்தைச் சேர்ந்த இந்த உலங்குவானூர்தி, கடல் மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 4,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, காலை 10:30 மணிக்குப் பிறகு விமானக் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்துள்ளது.
பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வானிலை உகந்ததாக இருந்ததாகக் கூறப்படுகிறது. தேசிய தீயணைப்பு முகமையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காட்டுத்தீயை எதிர்த்துப் போராடும் பயிற்சி நெறியில், உள்ளூர் அவசரகாலப் பிரிவுகளைச் சேர்ந்த 50 பயிற்சியாளர்கள்கலந்துகொண்டனர்.
உயிரிழந்த 7 பேரின் பெயர்களைச் சான் ஜுவான் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அவர்களில் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் மார்செலோ விடேலா (Marcelo Videla), தீயணைப்புத் தலைவர் ரூபன் காஸ்ட்ரோ (Rubén Castro), குடிமைப் பாதுகாப்பு இயக்குநர் கார்லோஸ் ஹெர்டியா (Carlos Heredia) மற்றும் பிரதித் தீயணைப்புத் தலைவர் ஜோர்ஜ் கார்பஜால் (Jorge Carbajal) ஆகியோர் அடங்குவர். விபத்துக்குள்ளான விமானத்தின் சிதைவுகள், உள்ளூர் சுரங்க நிறுவனத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்றால் கண்டுபிடிக்கப்பட்டன.
மீட்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது; எனினும், விபத்து நடந்த பகுதியை அடைவதற்கான வழித்தடங்கள் குறைவாக இருப்பதால் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அவசரகாலப் பணியாளர்கள் கரடுமுரடான மலைப்பாங்கான நிலப்பரப்பில் 7 மைல்கள் கால்நடையாகச் சென்றே அப்பகுதியை அடைய வேண்டியுள்ளது.
இந்த விபத்துக்கான காரணத்தைக் கண்டறியப் பொலிஸார் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
அண்டை நாடான பிரேசிலில் ஹெலிகாப்டர் மோதி, இண்டி பாப் பாடகரும் ராப்பருமான ஆலிவர் ட்ரீ உயிரிழந்து சரியாக ஒரு மாதத்திற்குப் பிறகு இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
கலிபோர்னியாவில் பிறந்த அந்த இசைக்கலைஞர், தனது வாழ்க்கையின் “மிகப்பெரியது” என்று வர்ணித்த ஒரு முக்கிய உலகளாவிய சுற்றுப்பயணத்திற்காக 70 க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய வகையில் ரியோ டி ஜெனிரோவிற்குச் சென்றிருந்தார்.
ஆனால், இசை நிகழ்ச்சிகளுக்கு இடையில், ட்ரீ அர்ஜென்டினா யூடியூபர் காஸ்பர் பிரிம் (Gaspar Prim) மற்றும் இசைத் தயாரிப்பாளர் லூகாஸ் பிரிட்டோ சாவேஸ் (Lucas Brito Chaves) ஆகியோருடன் ஒரு விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது, அது மற்றொரு ஹெலிகாப்டருடன் மோதியது.
ரெக்ரியோ டோஸ் பான்டிரான்டேஸ் (Recreio dos Bandeirantes) பகுதிக்கு மேலே மோதிக்கொண்ட இந்த விமானங்கள், மின்சார வாகன விற்பனையகம் ஒன்றுக்குச் சொந்தமான வாகன நிறுத்துமிடத்தில் விழுந்து தீப்பிடித்தன.
பல கலைஞர்களுக்கு அவர் “பெரும் உத்வேகமாக” திகழ்ந்ததாகக் கூறி, ட்ரீக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.
இதனிடையே, கடந்த பிப்ரவரி மாதம் பெரு நாட்டில் நடந்த இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் ஏழு சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.
தங்களது இராணுவ ஜெனரல் தந்தையர்களுடன் ஹெலிகாப்டரில் பயணம் செய்த குழந்தைகளில் 3 வயதுக் குழந்தையும் அடங்கும்.
விமானத்தில் பயணம் செய்த 11 பயணிகள் மற்றும் 4 பணியாளர்கள் உட்பட மொத்தம் 15 பேரும் விபத்தில் உயிரிழந்தனர்.
பெரு நாட்டின் அரெகிப்பா வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுத் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு உதவி செய்யச் சென்றுகொண்டிருந்தபோது, தெற்கு பெருவின் சலா விஜா (Chala Viejo) என்னுமிடத்தில் இந்த விமானம் ரேடாரிலிருந்து மறைந்தது குறிப்பிடத்தக்கது.












