ஈரானின் பொருளாதாரத்தை இலக்காகக் கொண்டு இதுவரை இல்லாத அளவிலான பாரிய நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், ஈரானுக்கு உதவும் அல்லது அந்நாட்டுடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் எந்தவொரு நாட்டுக்கும் கடுமையான பொருளாதா…

ஈரானின் பொருளாதாரத்தை இலக்காகக் கொண்டு இதுவரை இல்லாத அளவிலான பாரிய நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், ஈரானுக்கு உதவும் அல்லது அந்நாட்டுடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் எந்தவொரு நாட்டுக்கும் கடுமையான பொருளாதார தண்டனைகள் விதிக்கப்படும் எனவும் அவர் நேற்று (19) தெரிவித்துள்ளார்.

உடனடி இராஜதந்திர அல்லது இராணுவ தீர்வுகள் எதுவும் தென்படாத நிலையில், போர் ஆறாவது மாதத்தை நெருங்கி வரும் சூழலில் அமெரிக்கா பொருளாதார அழுத்தத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ஈரானை இலக்காகக் கொண்ட முன்னெப்போதும் இல்லாத அளவிலான பொருளாதாரப் போர் மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கையை இன்று அறிவிக்கவுள்ளதாக ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், ஈரானுக்கு எந்த வகையிலும் ஆதரவளிக்கும் வகையில் தமது நிதி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், விமான நிலையங்கள் அல்லது அரச நிறுவனங்களை பயன்படுத்த அனுமதிக்கும் நாடுகள் பாரிய பொருளாதார விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த நாடுகளுக்கு எதிராக எத்தகைய தண்டனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்பதை ட்ரம்ப் இதுவரை தெளிவுபடுத்தவில்லை. அதேவேளை, ஈரானைத் தவிர வேறு எந்த நாட்டையும் அவர் குறிப்பிட்டு பெயரிடவில்லை.

ஈரானை உலகம் இதுவரை கண்டிராத வகையில் பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்த அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும் என அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்திருந்த நிலையில், சுமார் ஒரு வாரத்தின் பின்னர் ட்ரம்பின் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

இதேவேளை, ஏவுகணைத் தாக்குதல்களில் அண்மையில் தற்காலிக இடைநிறுத்தம் ஏற்பட்டிருந்தாலும், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பான அமெரிக்கா – ஈரான் உடன்பாடு முறிவடைந்ததைத் தொடர்ந்து, முக்கிய கடல் வழியான ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்துக்கு ஈரான் தொடர்ந்து கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், நவம்பர் மாத தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில், ஈரானுடனான போர் தொடர்பில் ட்ரம்ப் உள்நாட்டிலும் அரசியல் ரீதியான விமர்சனங்களை எதிர்கொண்டு வருவதாக குறிப்பிடப்படுகிறது.