இஸ்ரேலின் எல்லைப் பகுதிகளில் இராணுவ அச்சுறுத்தல்கள் உருவாகுவதை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என இஸ்ரேல் இராணுவத் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் எயால் சாமிர் தெரிவித்துள்ளார். சிரியாவில் உள்ள விமானப்படைத் தளம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய பின்னர், இராணுவத் தளபதி வெளியிட்டுள…

இஸ்ரேலின் எல்லைப் பகுதிகளில் இராணுவ அச்சுறுத்தல்கள் உருவாகுவதை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என இஸ்ரேல் இராணுவத் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் எயால் சாமிர் தெரிவித்துள்ளார். சிரியாவில் உள்ள விமானப்படைத் தளம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய பின்னர், இராணுவத் தளபதி வெளியிட்டுள்ள முதலாவது கருத்தாக இது அமைந்துள்ளது. இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள தெற்கு சிரியா பகுதிகளுக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது எயால் சாமிர் இந்தக் கருத்தை வெளியிட்டதாக ஹீப்ரு மொழி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.“எமது எல்லைகளுக்கு அருகில் விரோத சக்திகள் தங்களது இருப்பை நிலைநிறுத்துவதற்கு நாம் அனுமதிக்க மாட்டோம். தேவையான இடங்களிலும் தேவையான நேரங்களிலும் எமது இராணுவ பலத்தை துல்லியமாக பயன்படுத்துவதற்கு நாம் தயாராக இருக்கிறோம்” என அவர் தெரிவித்ததாக சர்வதேச ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, சிரியாவின் அலெப்போ நகருக்கு அருகிலுள்ள அபு அல்-துஹூர் விமானப்படைத் தளம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருந்தது. துருக்கி இராணுவத்தினர் குறித்த விமானப்படைத் தளத்தில் நிலைநிறுத்தப்படுவதைத் தடுப்பதற்காகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் சிரியாவுக்கும் இடையில் பாதுகாப்பு விவகாரங்களில் தற்போதைய நிலையைத் தொடர்வது தொடர்பில் உடன்பாடு ஏற்பட்டிருந்ததாகவும், ஆனால் துருக்கி இராணுவத்தினரை விமானப்படைத் தளத்தில் நிலைநிறுத்துவதற்கு அனுமதிப்பதன் மூலம் டமாஸ்கஸ் அந்த உடன்பாட்டை மீறும் நிலைக்கு சென்றிருந்ததாகவும் இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது. எனினும், இஸ்ரேலின் இந்தக் குற்றச்சாட்டுகளை துருக்கி நிராகரித்துள்ளதுடன், அவை “அடிப்படையற்றவை” என தெரிவித்துள்ளது.