ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர் தொடர்பான வழக்கு விசாரணையின் போது முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர உள்ளிட்ட ஆறு பேரின் கருத்துக்கள் அடங்கிய சீடிக்கள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இன்று கொழும்பு கோட்டை நீதவான்…
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர் தொடர்பான வழக்கு விசாரணையின் போது முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர உள்ளிட்ட ஆறு பேரின் கருத்துக்கள் அடங்கிய சீடிக்கள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஈஸ்டர் தாக்குதல் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, குறித்த வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்துகள் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் ஆறு பேரின் அறிக்கைகள் அடங்கிய சி.டி.க்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில, நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் செயலாளர் சுகீஸ்வர பண்டார, அசங்க நவரத்ன மற்றும் மஹிந்த பதிரண ஆகிய ஆறு பேரும் வெளியிட்டதாகக் கூறப்படும் கருத்துகள் தொடர்பான சி.டி.க்களே இவ்வாறு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதேவேளை,, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரண்டு பொலிஸ் அதிகாரிகளையும் எதிர்வரும் செப்டெம்பர் 2ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக வவுனதீவு முகாமில் இருந்த இலங்கை ஆயுதப் படையினரின் புலனாய்வுத் தகவல்கள் அடங்கிய குறிப்புப் புத்தகம் ஒன்றை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தமது பொறுப்பில் எடுத்துள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. குறித்த குறிப்புப் புத்தகத்தை பொறுப்பில் வைத்திருந்த லெப்டினன்ட் கேணலிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் உள்ள புலனாய்வுத் தகவல்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.












