இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மீண்டும் திரும்பும் அகதிகளுக்காக வடக்கு, கிழக்கில் ஒரே பொறிமுறையின் மூலம் விவகாரங்களைத் தீர்ப்பதற்காக, 'ஒருங்கிணைந்த மீள் வருகை மற்றும் மறுவாழ்வு அலகு' ஒன்றை அரசாங்கம் நிறுவுமா என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவரும் மட்டக்களப்பு…
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மீண்டும் திரும்பும் அகதிகளுக்காக வடக்கு, கிழக்கில் ஒரே பொறிமுறையின் மூலம் விவகாரங்களைத் தீர்ப்பதற்காக, 'ஒருங்கிணைந்த மீள் வருகை மற்றும் மறுவாழ்வு அலகு' ஒன்றை அரசாங்கம் நிறுவுமா என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யுமான இரா. சாணக்கியன் கேள்வியெழுப்பினார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) அன்று நிலையியல் கட்டளை 27/2 இன் கீழ் விசேட கூற்றை முன்வைத்தே இவ்வாறு கேள்வி எழுப்பிய அவர் மேலும் பேசுகையில்,
"இந்தியாவில் உள்ள எமது மக்கள் மீண்டும் இலங்கைக்குத் திரும்ப வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சனத்தொகை வீதம் குறைவடைந்துந்துள்ளது. இவர்கள் மீண்டும் இலங்கைக்கு வருகை தந்தால் எமது சனத்தொகை விகிதாசாரமும் பாராளுமன்றப் பிரதிநிதித்துவமும் அதிகரிக்கும். எனவே, இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளின் காணிகள் இராணுவத்தின் வசம் இருந்தால், அவை விடுவிக்கப்பட வேண்டும்.
அத்துடன், இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைத் தமிழ் அகதிகள் மீண்டும் இலங்கைக்குத் திரும்ப விரும்புவது தொடர்பாக, குறிப்பாகப் பாதுகாப்பு அனுமதி, வீடமைப்பு, காணி மற்றும் சொத்துக்களுக்கான அணுகல், வேலைவாய்ப்பு, இழப்பீடுகள் மற்றும் அவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் ஆகிய விவகாரங்களில் எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை எடுத்து வருகிறது? குறிப்பாக, பல தசாப்தங்களாக இந்தியாவில் வாழ்ந்துவிட்டுப் பலாலி விமான நிலையம் வழியாகத் திரும்பிய 75 வயதுடைய இலங்கைத் தமிழ் அகதி ஒருவர் கடந்த ஆண்டு மே மாதத்தில் கைது செய்யப்பட்டதை முன்னிட்டு என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது?
உள்நாட்டுப் போரின் போது செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குத் தப்பிச் சென்று, அங்கு அகதிகளாகப் பதிவு செய்துகொண்ட இலங்கைப் பிரஜைகள், சட்டவிரோதமாக இலங்கையை விட்டு வெளியேறிய முறைக்காக மட்டும் குடிவரவுச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்படாமல், அங்கீகரிக்கப்பட்ட துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் வழியே மீண்டும் நாடு திரும்புவதற்கு அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட புதிய நடைமுறை என்ன? மேலும், இந்நடைமுறை எவ்வாறு இயங்கும்?
இலங்கைத் தமிழ் அகதி ஒருவர் இலங்கைக்குத் திரும்புவதற்கு முன்னர், குடியுரிமை உறுதிப்படுத்தல், பயண ஆவணங்கள் மற்றும் பாதுகாப்பு அனுமதி உள்ளிட்ட என்னென்ன நடைமுறைப் படிகளை மேற்கொள்ள வேண்டும்? 2009ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஒவ்வொரு ஆண்டிலும் இந்தியாவிலிருந்து இலங்கைக்குத் திரும்பிய இலங்கை அகதிகளின் எண்ணிக்கை எவ்வளவு? இதில் ஐ.நா. அகதிகள் முகவர் நிலையத்தின் உதவியுடன் திரும்பியவர்கள் மற்றும் சுயாதீனமாகத் திரும்பியவர்கள் எத்தனை பேர்? புதிய நடைமுறையின் கீழ் பாதுகாப்பு அனுமதிப் பரிசீலனைச் செயல்முறை எவ்வாறு அமையும்? என்ன அளவுகோல்கள் பயன்படுத்தப்படுகின்றன?
என்ன தகவல்கள் அல்லது ஆவணங்கள் தேவைப்படுகின்றன? இந்த மதிப்பீடு நிறைவு செய்யப்பட வேண்டிய அதிகபட்ச காலவகாசம் என்ன? பாதுகாப்பு அனுமதி மறுக்கப்பட்டால் என்ன நிகழும்? ஒருவருக்கு எதிரான (எதிர்மறையான) தீர்மானத்திற்குக் காரணங்கள் வழங்கப்பட வேண்டுமா? பாதிக்கப்பட்ட நபருக்கு அதை எதிர்த்து மறுபரிசீலனை செய்யவோ அல்லது மேல்முறையீடு செய்யவோ உரிமை உள்ளதா? தன்னிச்சையான அல்லது காலவரையறையற்ற பாதுகாப்புப் பரிசோதனைகளுக்கு எதிராக என்ன பாதுகாப்பு வழிமுறைகள் உள்ளன?
இலங்கைக்கு மீண்டும் திரும்பும் அகதிகளுக்குக் காணி, வீடமைப்பு, சொத்து, இழப்பீடுகள், வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரம் தொடர்பாக என்ன உதவிகள் வழங்கப்படும்? வடக்கு மற்றும் கிழக்கில் ஒரே பொறிமுறையின் மூலம் விவகாரங்களைத் தீர்ப்பதற்காக, அரசாங்கம் 'ஒருங்கிணைந்த மீள் வருகை மற்றும் மறுவாழ்வு அலகு' ஒன்றை நிறுவுமா?" என அவர் கேள்விகளை எழுப்பினார்.












