கனடாவில் விமானம் ஒன்றில் சிறுவன் ஒருவன் இருக்கைப்பட்டையை (Seat Belt) அணிய மறுத்ததைத் தொடர்ந்து, விமானம் பாதியிலேயே திருப்பப்பட்ட சம்பவம், விமானப் பயணங்களின் போது குழந்தைகளுடன் பயணம் செய்யும் முறை மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து உலகளவில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.…

கனடாவில் விமானம் ஒன்றில் சிறுவன் ஒருவன் இருக்கைப்பட்டையை (Seat Belt) அணிய மறுத்ததைத் தொடர்ந்து, விமானம் பாதியிலேயே திருப்பப்பட்ட சம்பவம், விமானப் பயணங்களின் போது குழந்தைகளுடன் பயணம் செய்யும் முறை மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து உலகளவில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

விக்டோரியாவில் இருந்து டொராண்டோ நோக்கிப் பறக்கத் தயாரான 'போர்ட்டர் ஏர்லைன்ஸ்' (Porter Airlines) விமானமே, ஆகஸ்ட் 6 ஆம் திகதி முனையத்திற்குத் திரும்ப நேரிட்டுள்ளது. சிறுவன் ஒருவன் தனது இருக்கையில் நின்று கொண்டு இருக்கைப்பட்டையை அணிய மறுத்ததாகவும், விமான நிறுவனத்தின் கூற்றுப்படி, அவனுடன் பயணித்த பெற்றோரும் விமானக் குழுவினரும் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததையடுத்து விமானம் திருப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாமதம் காரணமாக, நள்ளிரவுக்குப் பிறகு ஓடுபாதை மூடப்பட்டதால் விமானம் அன்று புறப்பட முடியாமல் போனதுடன், பயணிகள் மறுநாள் வேறொரு விமானத்தில் பயணம் செய்யும் சூழல் ஏற்பட்டது.

பாதுகாப்பா அல்லது சகிப்புத்தன்மையா? குழந்தைகளின் இத்தகைய நடத்தைகளை விமான நிறுவனங்கள் எவ்வாறு கையாள்வது என்பது குறித்து பொதுமக்களிடையே கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன.

குழந்தைகளுக்கான விமானப் பாதுகாப்பு நிபுணர் லியா துசோ (Lia Tuso) இதுகுறித்து பிபிசி ஊடகத்திற்குத் தெரிவிக்கையில், "பயணிகளின் மற்றும் குழந்தையின் பாதுகாப்பைக் கருதியே விமானக் குழுவினர் இந்த முடிவை எடுத்துள்ளனர். பாதுகாப்பற்ற முறையில் இருக்கும் கட்டுப்படுத்தப்படாத குழந்தைகள், குறிப்பாக விமானம் தரையிறங்கும்போதோ அல்லது புறப்படும்போதோ ஏற்படும் கொந்தளிப்பின்போது (Turbulence) ஆபத்தான முறையில் தூக்கி வீசப்படலாம்" என்று எச்சரித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் இது குறித்துக் கடுமையான விவாதங்கள் நடந்து வருவதுடன், பெற்றோர்கள் குழந்தைகளிடம் சற்று கறாராக நடந்து கொள்ள வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டு வருகிறது. அதேவேளை, விமானப் பயணத்தின் போது குழந்தைகள் பயத்தின் காரணமாகவே அவ்வாறு நடந்து கொள்ளக் கூடும் என்றும், அவர்கள் வேண்டுமென்றே தொந்தரவு செய்யவில்லை என்றும் சக பயணிகள் சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று கடந்த காலங்களிலும் (2018 இல் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் மற்றும் 2012 இல் ஜெட் ப்ளூ விமானங்களில்) குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சம்பவங்கள் நினைவுகூரப்படுவதுடன், குடும்பங்களுக்கு விமான நிறுவனங்கள் எந்தளவுக்குச் சகிப்புத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்ற கேள்வியும் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.