தேசிய பொலிஸ் ஆணைக்குழு இயங்கி வரும் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்திலுள்ள கட்டிடம் மற்றும் பிற கட்டிடத்திற்காகக் கடந்த ஆண்டில் 6 கோடி 70 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளதாகவும் இது பொருளாதார ரீதியில் பயனற்ற ஒரு செலவீனம் என்றும் தேசிய கணக்காய்வு…

தேசிய பொலிஸ் ஆணைக்குழு இயங்கி வரும் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்திலுள்ள கட்டிடம் மற்றும் பிற கட்டிடத்திற்காகக் கடந்த ஆண்டில் 6 கோடி 70 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளதாகவும் இது பொருளாதார ரீதியில் பயனற்ற ஒரு செலவீனம் என்றும் தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாடகைத் தொகையானது ஆண்டின் மொத்த வரவு-செலவுத் திட்டச் செலவில் சுமார் 30 சதவீதமாகும் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் செலுத்தப்பட்ட வாடகைப் பணம்தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்தே கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்திலுள்ள பண்டாரநாயக்க தேசிய அறக்கட்டளையின் கட்டிடமொன்றில் வருடாந்த ஒப்பந்தங்களின் அடிப்படையில் வாடகைக்கு இயங்கி வருவதாகவும் 2025 ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தின்படி ஆணைக்குழு அலுவலகம் இயங்கும் கட்டிடம் மற்றும் பிற கட்டிடத்திற்காக மாதமொன்றுக்கு 57 இலட்சத்து 162 ரூபா (ரூ. 57,00,162) செலுத்தப்பட்டுள்ளதாகவும் தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. இதேவேளை ஆணைக்குழுவின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்குப் போதுமான மனித வளங்கள் இன்மையால் கடந்த ஆண்டில் இலங்கை பொலிஸைச் சேர்ந்த 30 அதிகாரிகள் அதன் சேவைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இலங்கை பொலிஸுக்கு எதிராகத் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு 10,737 முறைப்பாடுகள் கிடைத்திருந்த பின்னணியில்இ பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராகக் கிடைக்கும் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் புலனாய்வு அதிகாரிகளாகப் பொலிஸ் அதிகாரிகளையே ஈடுபடுத்தியிருப்பதால் குறித்த விசாரணைகளைச் சுதந்திரமாகவும் நடுநிலையாகவும் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 240 ஒழுக்காற்றுக் கோப்புகளில் 123 கோப்புகளுக்கு மட்டுமே தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும்இ மேலும் ஒழுக்காற்று உத்தரவுகள் பிறப்பிக்கப்பட வேண்டிய கோப்புகளின் எண்ணிக்கை 117 ஆக உள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஐந்து பொலிஸ் மா அதிபர்களுக்கு எதிராக ஒழுக்காற்றுக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட போதிலும் அவர்களில் ஒருவருக்கு மாத்திரமே ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.