சதொச நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட பிரதிவாதிகளை விடுவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கியிருந்த தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது. இதன்படி, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்…

சதொச நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட பிரதிவாதிகளை விடுவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கியிருந்த தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது. இதன்படி, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சதொச முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பதில் பணிப்பாளர் மொஹமட் சகீர் உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் ஆரம்பத்திலிருந்து மீண்டும் விசாரிக்குமாறு ஐந்து நீதிபதிகள் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்குகளில், சதொச ஊழியர்களை அவர்களது உத்தியோகபூர்வ பணிகளில் இருந்து விலக்கி வேறு பணிகளில் ஈடுபடுத்தியதுடன், அவர்களுக்கு அரசுப் பணத்தில் ஊதியம் மற்றும் மேலதிக நேரக் கொடுப்பனவுகளை வழங்கியதன் மூலம் அரசுக்கு நட்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இந்த வழக்குகள், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு சட்டத்தின் 70ஆம் பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. எனினும், விசாரணையை ஆரம்பிப்பதற்கும் வழக்குகளைத் தாக்கல் செய்வதற்கும் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்களின் கையொப்பங்களும் இடம்பெறவில்லை என்ற பிரதிவாதி தரப்பின் ஆரம்ப ஆட்சேபனையை ஏற்று, கொழும்பு மேல் நீதிமன்றம் 2023 மே 19ஆம் திகதி பிரதிவாதிகளை விடுவித்திருந்தது. அந்தத் தீர்ப்புக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், 1994ஆம் ஆண்டின் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு சட்டத்தின் 2(8) பிரிவின்படி, ஆணைக்குழுவின் அதிகாரங்களைப் பயன்படுத்த மூன்று ஆணையாளர்களும் ஒரே நேரத்தில் இருப்பது கட்டாயமல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், ஆணைக்குழு உறுப்பினர் ஒருவர் தனித்தனியாக அமர்ந்தாலும் அதிகாரங்களைப் பயன்படுத்த முடியும் என்றும், அத்தகைய நடவடிக்கை முழு ஆணைக்குழுவின் நடவடிக்கையாகவே கருதப்படும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையின் செல்லுபடியாக்கத்தை கேள்விக்குட்படுத்தும் அதிகாரம் மேல் நீதிமன்றத்திற்கு இல்லை; அவ்வாறான அதிகாரம் அதனை விடவும் அதிகாரம் கூடிய நீதிமன்றங்களுக்கே உரியது என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. மேலும், ஒவ்வொரு விசாரணைக்கும் மற்றும் வழக்குத் தாக்கலுக்கும் மூன்று ஆணையாளர்களின் கையொப்பமும் கட்டாயம் என்ற நிலைப்பாடு நீதித்துறை செயல்முறையை தேவையற்ற வகையில் தாமதப்படுத்தும் என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.