கால்பந்து உலகில் வீரர்களின் பெயர்களுடன் கோடிக்கணக்கான யூரோக்கள் தொடர்பான தகவல்கள் அடிக்கடி வெளியாகின்றன. இருப்பினும், அந்தத் தொகைகள் அனைத்தும் வீரர்களின் சம்பளம் என்று பலரும் தவறாகப் புரிந்துகொள்கின்றனர். உண்மையில், சம்பளம் (Salary) மற்றும் சந்தை மதிப்பு (Market Value) என்பது மு…

கால்பந்து உலகில் வீரர்களின் பெயர்களுடன் கோடிக்கணக்கான யூரோக்கள் தொடர்பான தகவல்கள் அடிக்கடி வெளியாகின்றன. இருப்பினும், அந்தத் தொகைகள் அனைத்தும் வீரர்களின் சம்பளம் என்று பலரும் தவறாகப் புரிந்துகொள்கின்றனர். உண்மையில், சம்பளம் (Salary) மற்றும் சந்தை மதிப்பு (Market Value) என்பது முற்றிலும் வேறுபட்ட இரண்டு பொருளாதாரக் கருத்துகளாகும்.

ஒரு கால்பந்து வீரர் தனது கிளப்புடன் செய்துள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் வாராந்திரம் அல்லது மாதாந்திரம் பெறும் ஊதியமே அவரது சம்பளம் ஆகும். இது, அவர் கிளப்புக்காக விளையாடும் சேவைக்காக வழங்கப்படும் நிரந்தர வருமானமாகும்.

அதேவேளை, சந்தை மதிப்பு என்பது ஒரு வீரரை வேறு கிளப் ஒப்பந்தம் செய்ய விரும்பினால், அவர் தற்போதைய நிலையில் எவ்வளவு மதிப்புடையவர் என மதிப்பிடப்படும் கணிக்கப்பட்ட தொகையாகும்.இந்த மதிப்பு, வீரரின் வயது, ஆட்டத்திறன், தற்போதைய செயல்திறன், எதிர்கால வளர்ச்சி, ஒப்பந்தத்தின் மீதமுள்ள காலம் மற்றும் உலகளாவிய சந்தைத் தேவை உள்ளிட்ட பல காரணிகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை எளிமையாகப் புரிந்துகொள்ள ஒரு உதாரணத்தை எடுத்துக்கொள்ளலாம். ஒரு லாரியை இயக்கி ஒருவர் மாதந்தோறும் பெறும் வருமானம், கால்பந்து வீரரின் சம்பளத்திற்கு ஒப்பானதாகும். ஆனால் அதே லாரியை அதன் வயது, நிலை மற்றும் சந்தைத் தேவையைப் பொறுத்து விற்பனை செய்தால் கிடைக்கும் விலை, அதன் சந்தை மதிப்பாகும். இதே கொள்கையே கால்பந்து வீரர்களுக்கும் பொருந்துகிறது.

எனவே, ஒரு வீரரின் சந்தை மதிப்பு அதிகமாக இருப்பதால் அவர் அதே அளவிலான சம்பளம் பெறுகிறார் என்று கருத முடியாது. அதேபோல், அதிக சம்பளம் பெறும் அனைத்து வீரர்களும் அதிக சந்தை மதிப்பைக் கொண்டிருப்பார்கள் என்றும் கூற முடியாது. இந்த இரு மதிப்புகளும் வெவ்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகின்றன.

தற்போது உலகின் அதிக சந்தை மதிப்புடைய முதல் 10 கால்பந்து வீரர்கள் எர்லிங் ஹாலண்ட் – €220 மில்லியன் லமின் யமால் – €220 மில்லியன் கிலியன் எம்பாப்பே – €200 மில்லியன் மைக்கேல் ஒலிசே – €170 மில்லியன் ஜூட் பெல்லிங்கம் – €160 மில்லியன் பெட்ரி – €150 மில்லியன் வினிசியஸ் ஜூனியர் – €150 மில்லியன் புகாயோ சாகா – €140 மில்லியன் ஃப்ளோரியன் விர்ட்ஸ் – €130 மில்லியன் ஜமால் முசியாலா – €130 மில்லியன்

கால்பந்து தொடர்பான தகவல்களைப் புரிந்துகொள்ளும் ரசிகர்கள், வீரர்களின் சம்பளம் மற்றும் சந்தை மதிப்பு ஆகிய இரண்டிற்கும் இடையிலான இந்த அடிப்படை வேறுபாட்டை அறிந்திருப்பது அவசியமானதாகும்.