தண்டனை விதிக்கப்பட்ட 4962 கைதிகளில் 1492 பேருக்குப் புனர்வாழ்வுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டவர்களுக்கும், தன்னிச்சையாக முன்வரும் கைதிகளுக்குமே இவ்வாறு புனர்வாழ்வு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு வ…

தண்டனை விதிக்கப்பட்ட 4962 கைதிகளில் 1492 பேருக்குப் புனர்வாழ்வுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டவர்களுக்கும், தன்னிச்சையாக முன்வரும் கைதிகளுக்குமே இவ்வாறு புனர்வாழ்வு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு வழக்குகளுடன் தொடர்புபட்ட தண்டனைக் கைதிகளுக்குப் புனர்வாழ்வு அளிப்பதற்கான வாய்ப்புக்கள் தமக்கு இல்லை என சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் முன்னிலையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவாக கலந்துரையாடப்பட்ட விடயம் நாட்டில் சிறைச்சாலைகளில் ஏற்படும் நெரிசலைக் குறைக்கும் நோக்கில் போதைக்கு அடிமையானவர்களுக்குப் புனர்வாழ்வளிக்கும் செயற்பாட்டை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.சிறைச்சாலைகள் திணைக்களம், சமுதாயம் சார் சீர்திருத்தத் திணைக்களம், புனர்வாழ்வுப் பணியகம், தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை ஆகிய அரசாங்க நிறுவனங்களினால் புனர்வாழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அதிகாரிகள் குழுவில் விளக்கமளித்தனர். போதைக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்பதற்குத் தேவையான புனர்வாழ்வுச் செயற்பாடுகளை முன்னெடுத்திருப்பதாகத் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.வகுக்கப்பட்டுள்ள திட்டங்கள்இதற்குத் தேவையான அதிகாரிகளைச் சேவையில் இணைத்து, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பிரதேச செயலகப் பிரிவுகளில் இதற்கான நடவடிக்கைகளை வலுப்படுத்தும் திட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டினர். புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்களுக்குச் சமூகத்தில் காணப்படும் வரவேற்பு மற்றும் அவ்வாறானவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்குவதில் காணப்படும் குறைபாடுகள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

புனர்வாழ்வு நடவடிக்கைகளைத் திறமையான முறையில் முன்னெடுப்பதற்குச் சட்ட திட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்படவேண்டியதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.