போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக நீதிமன்றங்களால் தண்டனை விதிக்கப்பட்ட 4,962 சிறைக்கைதிகளுள் 1,506 பேருக்கு தற்போது மறுவாழ்வுப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக, ஆட்சி, நீதி மற்றும் குடிமக்கள் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நீதி…
போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக நீதிமன்றங்களால் தண்டனை விதிக்கப்பட்ட 4,962 சிறைக்கைதிகளுள் 1,506 பேருக்கு தற்போது மறுவாழ்வுப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக, ஆட்சி, நீதி மற்றும் குடிமக்கள் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்ற உத்தரவுகளின் கீழ் மறுவாழ்வுக்குப் பரிந்துரைக்கப்பட்ட கைதிகளுக்கும், தங்களின் விருப்பத்தின் பேரில் தானாக முன்வந்து மறுவாழ்வு பெற விரும்புபவர்களுக்கும் இப்பயிற்சிகள் வழங்கப்படுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி நஜித் இந்திக தலைமையில் நாடாளுமன்றத்தில் அண்மையில் கூடிய இக்குழுவின் கூட்டத்தின்போதே இக்கருத்துக்கள் கலந்துரையாடப்பட்டன.
இதில் சிறைச்சாலைகள் திணைக்களம், சமூக அடிப்படையிலான திருத்தங்கள் திணைக்களம், மறுவாழ்வு பணியகம் மற்றும் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை ஆகியவற்றின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
பல்வேறு குற்றங்களுக்காகத் தண்டனை அனுபவித்து வரும் அனைத்துக் கைதிகளுக்கும் ஒரே நேரத்தில் மறுவாழ்வு வாய்ப்புகளை வழங்குவதில் தற்போது நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுவதாகச் சிறைச்சாலை அதிகாரிகள் இதன்போது சுட்டிக்காட்டினர்.
இதேவேளை, போதைப்பொருள் அடிமைத்தனத்திலிருந்து மீளப் போராடும் நபர்களுக்கான மறுவாழ்வுத் திட்டங்களை விரிவுபடுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கமைய, தேவையான பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கும், நாடு முழுவதிலும் உள்ள பிரதேச செயலக மட்டத்தில் மறுவாழ்வுத் திட்டங்களைப் பலப்படுத்துவதற்கும் திட்டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.
மேலும், மறுவாழ்வு பெற்ற நபர்களுக்கான சமூக அங்கீகாரம் மற்றும் அவர்கள் நற்சான்றிதழ்களைப் பெறுவதில் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாகக் ஆராயப்பட்டது.
மறுவாழ்வுச் செயல்பாடுகளை மேலும் திறம்படச் செய்வதற்கும், மறுவாழ்வு பெற்ற நபர்கள் மீண்டும் சமூகத்துடன் சீராக இணைந்து வாழ்வதை இலகுபடுத்துவதற்கும் உரிய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை இக்குழுவின் உறுப்பினர்கள் இதன்போது வலியுறுத்தினர்.












