கல்முனை வடக்கு வைத்தியசாலையில் புதிதாக நியமனம் பெற்ற முஸ்லிம் பெண் ஊழியர்களைச் சீருடை தொடர்பான விவகாரத்தில் வேறு வைத்தியசாலைக்கு இடமாற்றியுள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாது. அதே வைத்தியசாலையிலேயே அவர்களுக்கு அவர்களின் கலாசாரத்திற்கமைய சீருடையை வழங்கி நியமனம் வழங்க வேண்டும் என எதிர்க…
கல்முனை வடக்கு வைத்தியசாலையில் புதிதாக நியமனம் பெற்ற முஸ்லிம் பெண் ஊழியர்களைச் சீருடை தொடர்பான விவகாரத்தில் வேறு வைத்தியசாலைக்கு இடமாற்றியுள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாது. அதே வைத்தியசாலையிலேயே அவர்களுக்கு அவர்களின் கலாசாரத்திற்கமைய சீருடையை வழங்கி நியமனம் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) அன்று இடம்பெற்ற நிதிச் சட்டத்தின் கீழான சிரம வாசனா நிதியத்தைக் கலைத்தல் தொடர்பான சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு வலியுறுத்தினார்.
அவர் அங்கு மேலும் பேசுகையில், "கல்முனை வடக்கு வைத்தியசாலையில் பிரச்சினையொன்று ஏற்பட்டுள்ளது. முஸ்லிம் பெண் ஊழியர்களின் சீருடை தொடர்பான பிரச்சினையால் அவர்களைக் கல்முனை வடக்கு வைத்தியசாலையிலிருந்து வேறு வைத்தியசாலைக்கு இடமாற்றியுள்ளனர். இது ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும்.
எமது நாட்டில் அந்தந்த மதங்களுக்கும், அந்தந்த மக்கள் பிரிவினருக்கும் மற்றும் அந்தந்தக் கலாசாரங்களைக் கொண்டவர்களுக்கும் தமது மதங்களையும் கலாசாரத்தையும் பின்பற்றும் உரிமை உள்ளது. இதனால், கல்முனை வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு கோருகின்றோம்.
புதிதாக நியமனம் பெற்ற முஸ்லிம் பெண் ஊழியர்களைச் சீருடை தொடர்பான விடயத்தால் இடமாற்றியுள்ளனர். இனம், மதம், குலம், வகுப்பு ரீதியான எவ்வித பாரபட்சமும் பாராமல் செயற்படுவதாகக் கூறியே ஆட்சிக்கு வந்தீர்கள். ஆனால், புதிதாக நியமனம் பெற்று வந்த 9 பேரை அவர்களின் சீருடை தொடர்பான விடயத்தைப் பயன்படுத்தி இடமாற்றம் செய்வது, நீங்கள் தேர்தல் மேடைகளில் முன்வைத்த கொள்கைத் திட்டங்களை முழுமையாக மீறுவதாகவே அமையும்.
எனவே, இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தி, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுத்து, இடமாற்றம் செய்யப்பட்ட 9 முஸ்லிம் பெண் ஊழியர்களையும் உடனடியாக அவர்கள் இருந்த இடத்திலேயே அமர்த்தி, அவர்களுக்குத் தம்மைக் கலாசாரத்திற்கமைய சீருடையை வழங்க வேண்டும். இதில் என்ன பிரச்சினை உள்ளது?" எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.



-559297_850x460.jpg)








