கல்வி, படைப்பாற்றல், கலாசாரம் மற்றும் கலைத்துறையில் முதலீடு செய்வதானது தேசிய அபிவிருத்தியிலிருந்து பிரிக்க முடியாததொன்றாகும், அத்தோடு அது அதன் அத்தியாவசியமானதொரு பகுதியாகும். பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஜூலை 24 அன்று கொழும்பில் நடைபெற்ற "கொழும்பு இலக்கிய விழா"வில் (Colombo Li…
கல்வி, படைப்பாற்றல், கலாசாரம் மற்றும் கலைத்துறையில் முதலீடு செய்வதானது தேசிய அபிவிருத்தியிலிருந்து பிரிக்க முடியாததொன்றாகும், அத்தோடு அது அதன் அத்தியாவசியமானதொரு பகுதியாகும்.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
ஜூலை 24 அன்று கொழும்பில் நடைபெற்ற "கொழும்பு இலக்கிய விழா"வில் (Colombo Literary Festival) கலந்துகொண்டு உரையாற்றியபோதே, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.
ஜூலை 24 முதல் 29 வரை ஆறு நாட்கள் நடைபெறும் இவ்விழாவானது, உள்நாட்டு மற்றும் சர்வதேச எழுத்தாளர்கள், கவிஞர்கள், திறனாய்வாளர்கள், கல்விமான்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள், கலைஞர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் உள்ளிட்ட பலதரப்பட்டோரையும் ஒன்றிணைத்து, கலந்துரையாடல், கருத்துப் பரிமாற்றம் உள்ளிட்ட கலை-இலக்கியங்களைப் பரிசீலிப்பதற்கானதொரு துடிப்பான தளத்தை உருவாக்குகின்றது. இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், ஜூலை மாதமானது நாட்டின் மிகக் கொடூரமான வரலாற்று அனுபவங்களில் சிலவற்றை நினைவூட்டும் மாதமாக அமைகின்றது என்றும், அவற்றில் பல ஆண்டுகால மோதல்கள் மற்றும் அழிவுகள், நூல்கள் எரிக்கப்பட்டமை உள்ளிட்ட பயங்கரங்களும் அடங்குகின்றன எனவும் குறிப்பிட்டார். 1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பொது நூலகம் எரிக்கப்பட்டதை நினைவுகூர்ந்த பிரதமர், அறிவு, நினைவுகள் மற்றும் வரலாற்றைப் பாதுகாப்பதில் இலக்கியம், நூல்கள், எழுத்தாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்களின் முக்கிய பங்கினை அங்கீகரித்து, அவற்றை மதிக்கும் கலாசாரமொன்றை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை இந்நிகழ்வுகள் வலியுறுத்துகின்றன என்பதைச் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் முக்கிய வரலாற்று அத்தியாயங்கள் கல்வியில் பிரதிபலிப்பதை உறுதிப்படுத்துவதன் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டிய பிரதமர், இதன் மூலம் எதிர்கால சந்ததியினருக்கு நாட்டை வடிவமைத்த விதம் பற்றிய அனுபவங்களைச் சிறந்த முறையில் புரிந்துகொள்ள முடியும் எனத் தெரிவித்தார்.
அத்துடன், உத்தியோகபூர்வக் கதைகள், கூட்டு நினைவுகளை அழிக்கவோ அல்லது கண்டுகொள்ளாதிருக்கவோ முற்படுகையில், உயிர்பிழைத்துக்கொண்டவர்கள், தமது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பியவர்கள் மற்றும் வரலாற்றுக்குச் சாட்சியாக அமைந்தவர்களின் கதைகளைப் பாதுகாக்கும் கடந்தகாலத்தின் முக்கிய ஆவணங்களாக நூல்களும் இலக்கியங்களுமே நிலைத்து நிற்கின்றன என்றும், டிஜிட்டல் தொழில்நுட்பம், சமூக ஊடகங்கள் மற்றும் தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளும் வசதிகள் என்பனவற்றால் வரையறுக்கப்படும் இக்காலக்கட்டத்துத் தலைமுறையினரிடையே வாசிப்புப் பழக்கத்தை வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
அத்தோடு, கல்வி மற்றும் கலாசாரத்திற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை வலியுறுத்திய பிரதமர், அரசாங்கம் என்ற வகையில் கல்வி, படைப்பாற்றல், கலாசாரம் மற்றும் கலைத்துறைக்கான முதலீட்டைத் தேசிய அபிவிருத்தியிலிருந்து பிரிக்க முடியாததொன்றாகவே கருதுகின்றது, அது அத்தியாவசியமானதாகும் என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். அறிவு, படைப்பாற்றல் மற்றும் கருத்துச் சுதந்திரத்தை மதிக்கும் ஒரு சமூகம், புதுமைகளைப் படைக்கவும், சவால்களை எதிர்கொள்ளவும், ஜனநாயகத்தைப் பலப்படுத்தவும் சிறந்த முறையில் தயாராக இருக்கும் எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வெகுசன ஊடகப் பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா அரியரத்ன, இந்திய எழுத்தாளரும் அரசியல்வாதியும் முன்னாள் ஐ.நா. இராஜதந்திரியுமான சசி தரூர், இராஜதந்திரப் பிரதிநிதிகள், புகழ்பெற்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு எழுத்தாளர்கள், வெளியீட்டாளர்கள், கவிஞர்கள், திறனாய்வாளர்கள், கல்விமான்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள், கலைஞர்கள் மற்றும் வாசகர்கள் கலந்து சிறப்பித்தனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு







-558030_850x460.jpg)
-558031_850x460.jpg)
-558032_850x460.jpg)
-558033_850x460.jpg)
-558066_850x460.jpg)
