கடற்கொள்ளையர்களின் அச்சுறுத்தல் அதிகரிப்பு உள்ளிட்ட கடற்றொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு விரைவில் நடைமுறைத் தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சராக இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்ட மீன்வள ஒருங்கிணைப்புக்…
கடற்கொள்ளையர்களின் அச்சுறுத்தல் அதிகரிப்பு உள்ளிட்ட கடற்றொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு விரைவில் நடைமுறைத் தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சராக இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்ட மீன்வள ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, மாவட்டத்தின் கடற்றொழிலை மேம்படுத்துவது, கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது மற்றும் அவர்களின் தொழில் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பில் விரிவான விவாதங்கள் இடம்பெற்றுள்ளன.
அதில், பங்கேற்ற மீன்வள சங்கங்களின் பிரதிநிதிகள், தாங்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் தொழில்ரீதியான பிரச்சனைகள் மற்றும் சவால்கள் குறித்து அமைச்சரிடம் விரிவாக விளக்கமளித்துள்ளனர்.
கடற்கொள்ளையர்களின் அச்சுறுத்தல்
ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள கடற்றொழிலாளர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் கடற்கொள்ளையர்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும், அத்தகைய நடவடிக்கைகளை முற்றிலுமாக ஒழிக்கவும் அமைச்சகம் ஒரு உடனடி மற்றும் நிரந்தரத் திட்டத்தை வகுக்க வேண்டும் என்று மீன்வள சங்கங்களின் பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.
ஒலுவில் துறைமுகத்தை ஒரு முழுமையான மீன்வளத் துறைமுகமாக வகைப்படுத்தவும், துறைமுகத்தில் தேங்கியுள்ள மணலை அகற்றி மீன்பிடி நடவடிக்கைகளுக்கு ஏற்றவாறு துறைமுகத்தை மேம்படுத்தவும் அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் துறைகளுடன் கலந்தாலோசித்து எழுப்பப்பட்ட பிரச்சினைகளுக்கு நடைமுறைக்கு உகந்த மற்றும் உடனடித் தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதியளித்துள்ளார்.












