நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை இன்று (10) காலை 7.00 மணி முதல் நாளை (11) காலை 7.00 மணி வரை அடுத்த 24 மணித்தியாலங்களுக…

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை இன்று (10) காலை 7.00 மணி முதல் நாளை (11) காலை 7.00 மணி வரை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு அமுலில் இருக்கும்.

இதன்படி, மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 60 கிலோமீற்றருக்கும் அதிகமாக அதிகரிக்கக்கூடும். இதனால், குறித்த கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படலாம்.

எனவே, மறு அறிவித்தல் வெளியாகும் வரை இந்த கடற்பரப்புகளுக்குச் செல்ல வேண்டாம் என மீனவர்கள் மற்றும் கடற்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை, காங்கேசன்துறை மற்றும் மன்னார் ஊடாக சிலாபம் வரையிலான கடற்பரப்புகளிலும், காலியிலிருந்து மாத்தறை வரையிலான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் கடல் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படக்கூடும் என்பதால், மீன்பிடி மற்றும் கடற்போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், கடல் நிலையும் திடீரென மிகவும் கொந்தளிப்பாக மாறக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே, வளிமண்டலவியல் திணைக்களத்தினால் தொடர்ந்து வெளியிடப்படும் வானிலை அறிவிப்புகளை அவதானித்து, அதற்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மீனவ மற்றும் கடற்சார் சமூகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.