போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் கிராமிய வீதிகளை புனரமைக்கும் செயற்திட்டத்திற்கு அமைவாக, கிளிநொச்சி மாவட்டத்தில் பல முக்கிய வீதி புனரமைப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதன் ஒரு பகுதியாக, திருநகர் பிரதான வீதியின் Pa…
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் கிராமிய வீதிகளை புனரமைக்கும் செயற்திட்டத்திற்கு அமைவாக, கிளிநொச்சி மாவட்டத்தில் பல முக்கிய வீதி புனரமைப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதன் ஒரு பகுதியாக, திருநகர் பிரதான வீதியின் Package 1ன் கீழ், கிளிநொச்சி A9 பிரதான வீதியிலிருந்து மாவட்டச் செயலகம் வரை அண்ணளவாக 300 மீற்றர் நீளமான வீதி இருவழிச் சாலையாக புனரமைக்கப்படவுள்ளது. அத்தோடு இதன் தொடர்ச்சியாக Package 1ன் கீழ் மொத்தமாக 650M வீதி புனரமைக்கப்படவுள்ளது. மாவட்டச் செயலகத்திற்கான முக்கிய பாதையாக அமைந்துள்ள இவ்வீதி, பொதுமக்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் சேவை பெறுநர்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் நோக்கில் நவீன தரத்துடன் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இதனுடன் இணைந்த வகையில், கிராமிய வீதி புனரமைப்புத் திட்டத்தின் கீழ்,திருநகர் பிரதான வீதி புனரமைப்பு – Package 2 – 1000 மீற்றர்திருநகர் பிரதான வீதி புனரமைப்பு – Package 3 – 800 மீற்றர்கிளிநொச்சி கண்ணன் கோவில் வீதி புனரமைப்பு – 520 மீற்றர்என பல கட்டங்களாக வீதி அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்கமைவாக, 04.08.2026 ஆம் திகதி இன்றைய தினம் நடைபெற்ற திருநகர் பிரதான வீதி புனரமைப்பு தொடர்பான முன் ஏற்பாட்டுக் கூட்டம் மற்றும் கள விஜயத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக, திட்டத்தின் நடைமுறைப்படுத்தல் தொடர்பான தொழில்நுட்ப மற்றும் நிர்வாக விடயங்கள் ஆராயப்பட்டன. குறித்த திட்டங்கள் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் (RDD) தொழில்நுட்ப மேற்பார்வையுடன் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், வீதி அமைப்பு, வடிகால் வசதிகள், மின்சார மற்றும் தொலைத்தொடர்பு கட்டமைப்புகளின் மீளமைப்பு, போக்குவரத்து பாதுகாப்பு மற்றும் கட்டுமான முன்னேற்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட துறைசார் நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், வீதியோர வர்த்தக நிலையங்கள் மற்றும் கடைத்தொகுதிகளின் உரிமையாளர்களுக்கு, புனரமைப்புப் பணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறும் அறிவுறுத்தல்கள் வழங்கப்படவுள்ளன. இத்திட்டங்கள் நிறைவடைந்த பின்னர், கிளிநொச்சி நகரப் பகுதியின் போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்பட்டு, பொதுமக்களுக்கான பாதுகாப்பானதும் இலகுவானதுமான பயண வசதி உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.












