புதிய அரசமைப்பு உருவாக்க விவகாரத்தில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும், ஓர் இலக்கை அடைவதற்கான பாதையில் அரைவாசி தூரத்தை கடந்ததன் பின்னர், அதனை புறந்தள்ளிவிட்டு மீண்டும் தொடக்கப்புள்ளியில் இருந்து ஆரம்பிப்பது புத்திசாலித்தனமான நகர்வு அல்ல என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்த…

புதிய அரசமைப்பு உருவாக்க விவகாரத்தில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும், ஓர் இலக்கை அடைவதற்கான பாதையில் அரைவாசி தூரத்தை கடந்ததன் பின்னர், அதனை புறந்தள்ளிவிட்டு மீண்டும் தொடக்கப்புள்ளியில் இருந்து ஆரம்பிப்பது புத்திசாலித்தனமான நகர்வு அல்ல என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தமிழ்பேசும் 6 கட்சிகளின் பிரதிநிதிகளிடம் இதனை தெரிவித்துள்ளார். மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துமாறு அழுத்தம் அதேவேளை, மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துமாறு இந்தியா தொடர்ந்து அழுத்தம் வழங்கிவரும் நிலையில், இலங்கைக்கு வருகை தரும் இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி அதனை மீண்டும் வலியுறுத்துவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்பேசும் மக்களின் நலனை முன்னிறுத்தி ஆக்கபூர்வமான முறையில் இணைந்து செயற்படுவதற்கு உடன்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய 6 தமிழ்பேசும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

நேற்று மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் இரா. சாணக்கியன் ஆகியோரும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பில் சுரேஷ் பிரேமசந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் முருகேசு சந்திரகுமார் ஆகியோரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ரவூப் ஹக்கீம் மற்றும் நிஸாம் காரியப்பர் ஆகியோரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் அமீர் அலி, மொஹமட் தாஹிர் உள்ளிட்டோரும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் ஜீவன் தொண்டமானும், தமிழ் முற்போக்குக் கூட்டணி சார்பில் பாரத் அருள்சாமி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, தமிழ்பேசும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கடந்த 1988 - 1989 ஆம் ஆண்டுகளில் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் எவ்வாறு கூட்டாக இணைந்து செயற்பட்டன என்பது குறித்தும், தற்போது மீண்டும் ஒரு கட்டமைப்பாக இணைந்திருப்பது குறித்தும் பிரதிநிதிகள் உயர்ஸ்தானிகரிடம் விளக்கினர்.அநுர சஜித்துடனான சந்திப்புகள் குறித்து விளக்கம்கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருடன் நடைபெற்ற சந்திப்புக்கள் மற்றும் அங்கு விவாதிக்கப்பட்ட விடயங்கள் குறித்தும் பிரதிநிதிகள் விரிவாக எடுத்துரைத்தனர்.

குறிப்பாக, ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது புதிய அரசமைப்பு உருவாக்கப் பணிகளை ஆரம்பித்தல், மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துதல், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவித்தல், மலையக மக்களுக்கான காணிப்பகிர்வு மற்றும் வீடமைப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்தும், அவற்றுக்கு ஜனாதிபதி அளித்த பதில்கள் குறித்தும் உயர்ஸ்தானிகருக்கு விளக்கமளிக்கப்பட்டது.இந்திய உயர்ஸ்தானிகரின் நிலைப்பாடுபிரதிநிதிகளின் கருத்துக்களைச் செவிமடுத்த உயர்ஸ்தானிகர், மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்துவது உள்ளிட்ட அனைத்து விடயங்கள் தொடர்பிலும் இந்தியா ஏற்கனவே பல்வேறு சந்தர்ப்பங்களிலும் இலங்கைக்கு அழுத்தம் வழங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும், நாட்டுக்கு வருகைதரும் இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, அரசின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போது அதனை மீண்டும் வலியுறுத்துவார் எனவும் உறுதியளித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் படையினர் வசமுள்ள காணிகள் தொடர்பான பிரச்சினை கரிசனைக்குரியது என்பதை ஏற்றுக்கொண்ட அவர், மலையகத்தில் 'டித்வா' சூறாவளி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான காணி வழங்கல் குறித்தும் விசாரித்தறிந்தார்.புதிய அரசமைப்பு விவகாரம்புதிய அரசமைப்பு உருவாக்கம் குறித்துக் குறிப்பிட்ட உயர்ஸ்தானிகர், "தற்போது நடைமுறையில் உள்ள அரசமைப்பை கைவிட்டு, மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து முழுமையாக ஆரம்பிக்கப் போகின்றீர்களா?" எனப் பிரதிநிதிகளிடம் வினவினார். அதற்குப் பதிலளித்த பிரதிநிதிகள், மாகாண சபைகள் முறைமை உள்ளிட்ட சில கூறுகள் மூலம் அதிகாரப் பகிர்வுக்கான கட்டமைப்பு ஏற்கனவே உள்வாங்கப்பட்டுள்ள நிலையில், அதனை முற்றாக அழித்துவிட்டு மீண்டும் தொடங்குவது ஆபத்தான விடயம் எனச் சுட்டிக்காட்டினர். புதிய அரசமைப்பு எனும் போது தற்போது இருப்பதை விடவும் கூடுதலான அதிகாரப் பகிர்வு பற்றியே தாம் பேசுவதாகவும் குறிப்பிட்டனர்.

இதற்குப் பதிலளித்த உயர்ஸ்தானிகர், இந்த விடயத்தில் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும், ஓர் இலக்கை அடைவதற்கான பாதையில் அரைவாசி தூரத்தைக் கடந்ததன் பின்னர் அதனைப் புறந்தள்ளிவிட்டு மீண்டும் தொடக்கப் புள்ளியில் இருந்து ஆரம்பிப்பது புத்திசாலித்தனமான நகர்வு அல்ல என்றும் அறிவுறுத்தியுள்ளார்.