ஹட்டன் - கொழும்பு மற்றும் ஹட்டன் - கண்டி பிரதான வீதிகளில் சுமார் ஒன்பது மணித்தியாலங்கள் போக்குவரத்து இன்று(05.08.2026) தடைப்பட்டு இருந்ததாகவும், அதிகாலை 6.30 மணியளவில் வழமைக்கு திரும்பியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை பகுதியில் நேற்று(04…
ஹட்டன் - கொழும்பு மற்றும் ஹட்டன் - கண்டி பிரதான வீதிகளில் சுமார் ஒன்பது மணித்தியாலங்கள் போக்குவரத்து இன்று(05.08.2026) தடைப்பட்டு இருந்ததாகவும், அதிகாலை 6.30 மணியளவில் வழமைக்கு திரும்பியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை பகுதியில் நேற்று(04) இரவு ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, அதே இடத்தில் மீண்டும் மண் சரிந்ததால் நேற்று இரவு 9.30 மணி முதல் இரண்டு பிரதான வீதிகளிலும் அனைத்து வகையான வாகனப் போக்குவரத்தும் முற்றாக பாதிக்கப்பட்டது.
தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் மலைச்சரிவிலிருந்து பெருமளவு மண் மற்றும் கற்கள் வீதியில் சரிந்ததால், அவற்றை அகற்றும் பணிகளில் பெரும் சிரமம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மண்சரிவு அபாயம்
இந்நிலையில், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் இயந்திரங்கள், பணியாளர்கள் மற்றும் ஹட்டன் பொலிஸார் இணைந்து இரவு முழுவதும் மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
கடும் முயற்சிகளின் பின்னர் இன்று அதிகாலை 6.30 மணியளவில் வீதியில் தேங்கியிருந்த மண் அகற்றப்பட்டு, ஒரு வழிப் போக்குவரத்துக்கு மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.
எனினும், மண்சரிவு ஏற்பட்டுள்ள அந்தப் பகுதியில் மண் தொடர்ந்து சரிந்துகொண்டிருப்பதால், எந்த நேரத்திலும் மீண்டும் போக்குவரத்து பாதிக்கப்படக்கூடிய அபாயம் நிலவுவதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மேலும், தொடர்ச்சியான மழை காரணமாக ஹட்டன் - கொழும்பு மற்றும் ஹட்டன் - கண்டி பிரதான வீதிகளின் பல இடங்களில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாகவும், இந்த வீதிகளை பயன்படுத்தும் அனைத்து வாகன சாரதிகளும் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இந்த போக்குவரத்து தடை காரணமாக வேலைக்குச் செல்ல முயன்ற அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள், பாடசாலை மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பயணித்தவர்கள், வைத்தியசாலைகளுக்குச் செல்ல வேண்டிய நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் நீண்ட நேரம் சிக்கித் தவித்ததுடன், பல்வேறு அசௌகரியங்களையும் எதிர்கொண்டனர்.
மத்திய மலைநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தொடர்ச்சியான கனமழை பெய்து வருவதால், மலைச்சரிவுகள் மற்றும் மண்சரிவு அபாயம் அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே, மலைப்பகுதி பிரதான வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் வானிலை அறிவிப்புகளை கவனத்தில் கொண்டு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடித்து மிகவும் அவதானமாக பயணிக்குமாறு அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.












